.

.
.

Tuesday, July 14, 2009

காலாட்டிட்டு தோசை சாப்பிடலாமா?


கண்டிப்பா சாப்பிடக் கூடாதுங்க, ஏன் தெரியுமா? பண்பாடு அல்ல என்று கூறுகிறீர்கள் ஆனால் அது மட்டுமல்ல, பின்னே ? இந்தப் பதிவைக் கொஞ்சம் படிங்க, பிற‌கு புரிஞ்சுக்குவீங்க ஏன் காலாட்டி தோசை சாப்பிடக் கூடாதுன்னு....
கடந்த காலம் கண்முன் விரிகிறது...
பல வித வாழ்க்கைச் சூழல்களில் வாழ்வை அனுபவித்து வாழ்ந்த சிறு பிராயம் அது! இன்றுவரை மறக்கவியலாத, அனுபவித்து மகிழ்ந்த, நெகிழ்ந்த சம்பவங்கள் பல அந்த வாழ்வில், ஹாஸ்யங்களுக்கும் பஞ்சமில்லாத வாழ்வு அது, நவீன வாழ்வில், நான்கு சுவர்களுக்குள் மூழ்கி மறைந்துவிடும் இன்றைய வாழ்வு (பின்)அடைவுநிலை வாழ்வல்ல அது, இயற்கையின் ஒரு பகுதியாக வாழ்ந்து, பறந்து திரிந்த காலம், அது ஒரு வசந்த காலம்!

சரி நம் நம் கதைக்கு வருவோம். என் சிறு வயதில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான உண்மைச் சம்பவம்! என் வாழ்வில் தோசையைக் கண்டாலே துண்டைக் காணோம், துணியை காணோம் என எனை தூர ஓடச்செய்த துயரச் சம்பவம்! தோசை என்றாலே நான் ஏன் இப்படி பயந்து நடுங்குகிறேன் எனும் ரகசியம் புரியாதவர்களுக்கு, நான் கண்ட/அனுபவித்த‌ அந்த பயங்கரக் கதையைச் சொல்கிறேன், நீங்களும் கேளுங்கள்...

சில கால‌ங்களுக்கு முன்பு, ஒரு பட்டணம், அந்தப் பட்டணத்தில், ஒரு ஒதுக்குப்புறமான குடியிருப்பு, அங்கே இயற்கை அழகெல்லாம் எடுத்துச்சொல்லும்படி அவ்வளவு எடுப்பில்லை, அங்கும் இங்குமாய் திட்டுத்திட்டாய் சில குடியிருப்புகள், அதில் தற்காலிகமாக ஒரு வாடகை வீட்டில் எங்கள் குடும்பம், அக்கம் பக்கமெல்லாம் நிறைய குடித்தனங்கள், அதில் ஏழ்மையும் நேசமும் பிண்ணிப் பிணைந்த நம் இனிய தமிழ் மக்கள்!
சம்பவம் நடந்த தினத்தன்று, பக்கத்து வீட்டில் ஒரு துக்க காரியம், ஆம், பக்கத்து வீட்டுத்தாத்தா காலமாகி விட்டிருந்தார், அன்றைக்கு மறுநாள் அவருக்கு திதி, அவர்கள் வீட்டில் ஏகப்பட்ட கூட்டம். பக்கத்து வீடான எங்கள் வீட்டில்தான் அவர்களுக்கான சமையல் வேலைகள் மும்முறமாக நடந்து கொன்டிருக்கின்றன..., இயற்கையிலேயெ நன்றாக சமைக்கக்கூடிய என் தாயும் மேலும் சில உள்ளூர் செஃபுகளும் சேர்ந்து அதிரடியாகத் தங்கள் நளபாகத் திறமையை காட்டிக்கொன்டிருந்தனர். ஒரு வயதான அம்மணி தலைமைச் செஃபாக, ஆட்களை விரட்டி வேலை வாங்கிக் கொன்டிருந்தார்.

சமையல் பொருட்களை மேலே கீழேயெல்லாம்கொட்டி சமையலறையை நாறடித்து, ஊர்க்கதைகள் எல்லாம் பேசி ஒரு வழியாக சமையல் வேலைகள் தொடர்ந்து சில மணி நேரங்கள் கழித்து முடிவுக்கு வந்தன, முக்கியமான ஒன்றைத்தவிர, அது இரவு தங்குபவர்களுக்கான காலை உணவு!, அதற்கான ஏற்பாடுகள் துவங்கின‌, ஏற்கனவே ஊறவைத்திருந்த அரிசியை அரைத்து தோசை மாவெல்லாம் ஒரு பெரிய அண்டாவில் கரைத்து, உப்பெல்லாம் சேர்த்து...
கடைசியாக நம் தலைமை செஃபின் திறமைக்கு சவாலாக அமைந்தது ஒரு விக்ஷயம், அதாவது தோசை மாவை புளிக்க வைக்க தயிர், கள், யீஸ், ஈபு(அம்மா இல்லைங்க, உணவுகளை புளிக்க வைக்கப் பயன்படும் ஒரு வித பொருள்) எதுவுமே கிடைக்கவில்லை, மணி வேறு இரவு 10 ஐத் தாண்டிவிட்டது! கடையெல்லாம் மூடியாச்சு, இரவலும் எங்கும் கிடைககவில்லை!

தனது மூளையைக் கசக்கிப் பிழிந்தார் தலைமை செஃப், ஆ! ஒரு வழி கண்டு பிடித்தார், விடு விடென்று ஓடினார் குளியலறைக்கு, அங்கிருந்த அவரது சிக்ஷ்யப்பிள்ளைகள் அவருக்கு ஏதோ அவசரம் என நினைத்துக் கொன்டனர், ஆனால்.......

அவர் தனது கால்களை அலசிக்கொன்டு வெளியே வந்தார், தோளில் போட்டிருந்த வியர்வைத்துடைக்கும் துணியால் கால்களைத் துடைத்தார், பிற‌கு.....

அந்த தோசை மாவு அண்டாவை நெருங்கி, தனது ஒரு காலை(!???)அதனுள் விட்டுத்துளாவத் தொடங்கினார், உவ்வேக்.... (மாவை புளிக்க வைக்கும் குறுக்கு வழியாம், கடவுளே!!!)

இதை யாருமே எதிர்பார்க்கவில்லை, என் அம்மாவிற்கு வாந்தி வராத குறை!, அவரும் அவர் தோழிகளும் ஆச்சரியமும், அதிர்ச்சியுமாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொன்டனர். எதுவுமே நடக்காதது போல சில நிமிடங்கள் தன் முட்டிவரை கால் விட்டுத் துளாவி விட்டு, அண்டாவை மூடிவைத்துவிட்டு காலை கழுவிக்கொன்டார் நம்ம தலைமை செஃபு அம்மணி!

மூடி வைத்த அந்த மானங்கெட்ட மாவும் நீர்த்துப்போகாமல் மறுநாள் புளித்து, அதை அடுக்கடுக்காய் தோசைகள் வார்த்து, அதை அனைவரும் ருசித்துச் சாப்பிட்டு, மிகப்பெரிய தமாக்ஷ் போங்க, ஆனால் கால் விட்டு ஆட்டி மாவைப் புளிக்க வைத்த ம்ர்மம் யாருக்குமே தெரியாது, என் அம்மா மற்றும் அவர் தோழிகள் சிலரைத்தவிர்த்து..., தெரிந்தவர்கள் தோசை இருந்த பக்கமே போகவில்லை, அவர்கள் குடும்பத்தினரையும் சேர்த்து...

இப்போது சொல்லுங்கள், இந்தத் தோசையை சாப்பிட அதன் ரகசியம் தெரிந்த யாருக்காவது மனம் வருமா?, ஆனால் இந்த ரகசியம் தெரியாத ஒரு கூட்டம் அதை வெளுத்துத் தள்ளியிருக்கிறதே, பாவம்! என் அம்மா அந்த தோசையை எங்கள் யாரையும் வாயில் வைக்க விடவில்லை. இப்போது நினைத்தாலும் குமட்டிக்கொன்டு வருகிறது..

கடவுளே, அன்றிலிருந்து இன்றுவரை என் தாய் ஒருவரைத்தவிர வேறு யார் வீட்டில்/எந்த புகழ் பெற்ற உண்வகமானாலும் சரி அங்கே தோசை, அதன் தம்பி இட்டிலி என எதையும் தொடமாட்டேன்! அதிகம் வற்புறுத்தினாலும் வயிற்று வலி அல்லது சாப்பிட்டாச்சு என பயங்கரமாய் நடித்து தப்பித்து விடுவேன்....

இப்போது சொல்லுங்கள் காலாட்டி தோசை சாப்பிடலாமா?

பி.கு :
பதிவுலகப் பெருமக்களுக்கு : இந்தச் சம்பவத்தில் வந்த கதாபாத்திரங்கள் யாவரும் உண்மையில் வாழ்ந்த, வாழ்ந்துகொன்டிருக்கின்ற மனிதர்களேயன்றி கற்பனையல்ல!

தமிழ ஆர்வலர்களுக்கு மட்டும் : இந்தப் பதிவு எந்த உள் நோக்கம் வெளி நோக்கம் ஏதும் இன்றி உண்மையையே அடிப்படையாகக் கொண்டு பதிவிடப்படுகிற‌து! தமிழ் உணவுகளை மட்டம் தட்ட கே.எப்.சி, மெக் டோனால்ட், பிஸ்ஸா மற்றும் பல பிரபல உணவுக் கம்பெனிகளிடம் கைகோர்த்து கையூட்டு வாங்கிக்கொன்டு இட்டுக்கட்டி எழுதப்பட்ட பொய்ப்பிரச்சாரம் அல்ல, அல்ல, அல்ல...

எல்லோருக்கும் : மேலும் இதுபோன்ற அதிர்ச்சியில் உறைய வைக்கும் அதி பயங்கரமான உண்மைச் சம்பவங்களோடு விரைவில் உங்களைச் சந்திக்கிறேன். ‌

4 comments:

Sathis Kumar said...

ஹி..ஹி..ஹி..

இனிமே கடைக்கு போனா தோசை கேன்சல்!

(பி.கு : காலையில் புளித்தவகை உணவுகளை உண்பது உடலுக்கு கெடுதியாம். பட்சி சொல்லுது.. :)

sivanes said...

சிவனேசு : வாங்க சதீசு வாங்க, நம்ம வெ.தொ.சா.ச(வெளியிடங்களில் தோசை சாப்பிடாதோர் சங்கம்) முத்ல் ஆளா வந்து பதிஞ்சிருக்கீங்க, உங்களுக்கு வாழ்த்துக்கள்!

ம‌ன‌சாட்சி : (ஆஹா, கே.எஃப்.சி கார‌ன்கிட்ட‌ காசு வாங்கிட்டு போட்ட‌ ப‌திவு வேலை செய்ய‌ ஆர‌ம்பிச்சிடிச்சு, ஹி ஹி ஹி)

VIKNESHWARAN ADAKKALAM said...

:) நோ கமெண்ட்ஸ்...

sivanes said...

விக்னேஸ், நீங்க வெ.தோ.சா.சங்கத்திலே சேராட்டலும் பரவாயில்லை, ஆனால் எந்த தோசைக்கடைக்காரர்க் கிட்டேயும் என்னைப்போட்டுக் கொடுத்திடாதீங்க, ப்லீஸ்....