.

.
.

Saturday, July 18, 2009

வெண்சுருட்டு வேந்தர்கள்


அன்பர்களே! நண்பர்களே! இன்று நம்மோடு இணந்திருக்கும் மதிப்புமிகு, அய்யா திரு.முத்துக்கிருக்ஷ்ணர் அவர்களுக்கு வணக்கமும், வரவேற்பும் கூறிக் கொன்டு நமது பதிவுக்குள் நுழைவோம் வாருங்கள்.



வெண்சுருட்டு, (சுலபமாக "சிகரெட்" என்று அழைப்போமே அவரேதான்), இவர் உலகெங்கினும் மிக மிகப் பிரபலமானவர். இவருக்கு சுருட்டு, பீடி என அண்ணன் தம்பிகளும் உண்டு, இருந்தாலும் இவரை வெல்ல யாராலுமே முடியாது, பதின்மர், பருவ வயதினர், இளைஞர், நடுத்தர வயதினர், வயோதிகர் என பல பிரிவிலும் வயதிலும் இவருக்கு நண்பர்கள் உண்டு! இவருக்கு ஏழை, பணக்காரர், ஆண், பெண் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது! சம நோக்குச் சிந்தனையாளர் ,பணமிருப்பவரெல்லாம் புகைக்கலாம், ஆனால் அவர்கள் பின்விளவுகளைப் பற்றி நினைத்துப் பார்க்காத தைரியசாலியாக இருக்க வேண்டும்(இது மிக மிக முக்கியமான அடிப்படைத் தகுதி)!

பாருங்கள் எப்படிப்பட்ட ஒரு மிகச்சிறந்த பொது நோக்குவாதி. இவரு ரொம்ப ரொம்ப நல்லவருங்க, ஆனா பாருங்க, சில சமூக சீர்த்திருத்தவாதிகளும், மக்கள் பொது நல விரும்பிகளூம் (கடவுளைக்கூட குறை சொல்லும் இந்த உலகம்) பல நன்மைகள்(????) புரியும் இவரை வெறுக்கிறார்கள். என்னன்னு சொல்ல ?, இவர் மனித குல மேம்பாட்டிற்காக ஆற்றிவரும் அரும் பெரும் நன்மைகளை பட்டியலிட்டு, அவருக்கு நன்றி கூறுவதோடு, அவரை தங்களது ஆறாம் விரலாக்கிக்கொன்ட நண்பர்களுக்கும் நமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம், புகைப்பதால் அவர்களுக்கு ஏற்படும் நன்மைகள், சமுதாயத்திற்கு, சுற்றுச்சூழலுக்கு, வருங்கால சந்ததிக்கு என பல் முனைகளிலிருந்தும் விளையும் நன்மைகளையும், சிறப்புக்களையும் எடுத்துக்கூறுவதே இந்தப் பதிவின் தலையாய நோக்கமாகும்.

நாங்கலெல்லாம் புகைப்பது தவறு என தலையிலடித்துக் கொன்டிருக்கிறோம், வெண்சுருட்டுக்கு ஆதரவுப் பிரச்சாரமா? என வெகுண்டெலும் சமூக ஆர்வலர்களே, அமைதி காக்க! இவ்வளவு துணிச்சலாக இந்தப் பதிவை வெளியிட்ட என்னைத் திட்ட பதிவின் இறுதியில் தக்க ஏற்பாடுகளை செய்திருக்கின்றேன், (பின்னூட்டங்கள் வழி போரிடும் வசதி உங்களுக்காக காத்திருக்கிறது கவலை வேண்டாம்!)

புகைக்கும் நண்பர்களே, இதுவரையில் புகைப்பது தவறு, ஆபத்து, அடாத செயல், தீமை எனும் எதிர்மறை கருத்துக்களைக் கேட்டுக் கேட்டு மிகவும் சோர்ந்து போயிருப்பீர்கள், உங்கள் மனச்சோர்வை போக்கி, புகைப்பது மிக மிகச் சரியான செயல் என்பதை நிரூபித்து! உங்களுக்கு வக்காளத்து வாங்கித்தரவே இந்தப் பதிவு

மேலும் உங்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் இந்தப் பதிவில் ஓரிடத்திலும் "புகைக்காதீர்கள்" "வேண்டாம் புகைக்கும் பழக்கம்" "புகைப்பது தீமை" போன்ற எதிர்மறைக் கருத்துக்கள் அறவே இடம் பெறாமல் மிக மிக எச்சரிக்கையோடு, "புகைப்பது நல்லசெயல்" "இப்படியே தொடர்ந்து புகைப்பிடியுங்கள்" "உடல் நலன், பொது நலன் கவலையெல்லாம் வேண்டாம் தொடர்ந்து புகையுங்கள்" என்பன போன்ற அதரவுப் பிரச்சாரங்களை முன்வைத்து இந்தப்பதிவு இடப்படுகிறது, மகிழச்சிதானே?

நீங்கள் சிறு வயதில் உங்களூக்கு முன்மாதிரியாக விளங்கவேண்டிய தந்தை அல்ல‌து உறவினர்களினை முன்மாதிரியாகக் கொன்டு புகைப்பதில் இற்ங்கியவரா? சற்று வளர்ந்த பின்னர் நீங்களும் அந்த நல்லப் பழக்கத்தை கைக்கொள்ள வேண்டும் எனும் பரந்த நோக்கில் கடைக்கு அனுப்பி வெண்சுருட்டு வாங்கிவர அனுப்பப்பட்டவரா?,

பள்ளிப் பருவத்தில் "திருட்டு தம்" என்பார்களே அந்த வம்சாவளியா?

வளர்ந்த பின் காதல் தோல்வி, இன்ன பிற கவலைகள் வழி வந்தவரா?
அல்லது

புகைப்பது "ஸ்டைலு" என அழகாக மேலே தூக்கியெறிந்து வாயால் கவ்வி, எரியும் வெண்சுருட்டை வாய்க்குள் அடக்கி, சட்டைக்காலர் மடிப்பிலிருந்து வாயால் உருவி "பேக்ஷனாக" புகைத்து, ஹாலிவூட் நடிகப் பரம்பரை‌யே பிச்சையெடுக்கும் வண்ணம் பல வீர சாகசங்களைத் த‌ந்த சினிமாவால் விளைந்தவரா? எது எப்படி இருந்தாலும் புகைப்பதன் வழி தங்களின் வாழ் நாட்களைக் குறைத்துக்கொள்ளும் ஒரு அரிய, பெரிய யாராலுமே செய்ய முடியாத ஒரு வீரமான காரியத்தில் துணிந்து இறங்கியிருக்கின்றீர்கள், முதலில் உங்களூக்கு எமது பாராட்டுக்கள் உரித்தாகுக.

இந்தச் சமூக ஆர்வலர்கள் இருக்கின்றார்களே, அவர்களூக்கு வேறு வேலையே இல்ல போங்கள், எப்போது பார்த்தாலும் புகைப்பது தீமை, தவறு என்று சொல்லிக்கிட்டு, மேலும் புகைப்பவர்களை பயமுறுத்தும் வண்ணம் புகைப்பதால் ஏற்படும் நோய்கள், அதன் தீவிர பாதிப்புக்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகள், புள்ளிவிவரங்கள், புகைப்பிடித்தலைத் தடுக்கும் பிரச்சாரங்கள் போன்றவற்றை பெரும் பொருட் செலவுகளில் மேற்கொன்டு வருவது, புகைப்பவர்களையும், அவரைச் சார்ந்திருக்கும் பலரையும் பல தீவிரமான நோய்களிலிருந்து காக்கும் தீய முயற்சியே, அதனால் அவர்களை முற்றாக விலகி இருங்கள்!

ஒருவேளை அந்தப் பிரச்சாரங்கள் வெற்றி பெற்று நீங்கள் திருந்திவிட்டால், உங்கள் ஆயுள் நீண்டு விடுமே?, நோய் நொடி எதுவும் உங்களை அண்டாமல் போய் விடுமே, சுற்றுப்புறச்சூழல் கொஞ்சம் சீர்பட்டு விடுமே?, இதையெல்லாம் நடக்க விடலாமா? கூடவே கூடாது அல்லவா?

எனவே உங்களையே நம்பிக்கிடக்கும் குடும்பத்தின் நலன் மட்டுமே மனதில் கொள்ளாது, பல வெண்சுருட்டுக்கம்பெனிகள், நாட்டுக்குக் கிடைக்கும் அந்நிய செலாவணி, உயர்ந்த வரிக்கட்டணம், நோயாளிகளிடமிருந்து பணம் கறப்பதையே தொழிலாகக் கொன்ட மருத்துவமனகள், காப்புறுதி நிறுவனங்கள் என பரந்த(????) நோக்கோடு தொடர்ந்து, நீங்கள் வாழ்விழந்தாலும் அவர்களை வாழவைக்கும் பரந்த நோக்கோடு புகைப்பிடியுங்கள்,

விரைவில், நீங்களும் மருத்துவமனையை நாடலாம் எனும் நம்பிக்கையோடு தொடர்ந்து புகை பிடியுங்கள், முடிந்தால் வீட்டில் எல்லொருடன் இருக்கும் பொழுது, துணைவியார் தாய்மையடைந்திருக்கும் பொழுது, சிறிது வளர்ந்த உங்கள் குழந்தைகள் உங்களை பிரமித்து பார்த்துக் கொன்டிருக்கும் பொழுது, வெண்சுருட்டைப் புகைத்து புகையை பல வளையங்களாக விடுவது, கடல் நாகம் போல புஸ்ஸு புஸ்ஸு என புகையை வெளிவிடுவது போன்ற சாகசங்களை அவர்களுக்கு செய்து காட்டி அவர்களையும் உங்கள் பாதைக்கு அழைத்து வந்து புகைப்பதை குடும்பத்தின் பாரம்பரியமாக்கிவிடுங்கள்,

புகைப்பதால் ஏதேனும் நோய் வந்து விட்டது தெரிந்தால், அதை மிகச் சர்வ சாதாரண‌மாக எடுத்துக்கொள்ளுங்கள், கவலை வந்தால், மேலும் புகைப்பதை அதிக‌ப்படுத்தி நோயை விரிவுபடுத்திக்கொள்ளலாம், பின்னர் "எல்லாம் தலைவிதி" "நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்" என வேதாந்தம் பேசவும் கண்டிப்பாக தங்களை தயார் படுத்திக் கொள்ளவும்! கூடிய விரைவில் இந்த வசனங்கள் நிச்சயம் எதிர்கால வாழ்வுக்கு தேவைப்படும்!

மேலும், புகைப்பதானால் ஏற்படும் தீமைகளை ஒரு போதும் உணர்ந்து திருந்த நினைத்துவிடாதீர்கள்! அப்படிச் செய்வதால், உங்கள் வாழ்வு ஆரோக்கிய ரீதியிலும், சுகாதார ரீதியிலும் மேம்படும் ஒரு அபாயகரமான விளைவுக்கு இட்டுச்சென்றுவிடும், கவனம்!

முடிந்தால் , புகைப்பதன் தீமைகள், பாதிப்புகள், வரக்கூடிய நோய்கள் போன்றவற்றை அடிக்கடி படித்து அலட்சியமாக சிரித்து வையுங்கள், இது உங்கள் மனதில் புகைப்பதன் தீவிரத்தை மேம்படுத்தும்.

அனேகமாக நோய்க்கு முன், உங்கள் முகம் பொழிவிழக்கலாம், கண்கள் குழி விழலாம், விரல் நகங்கள் மஞ்சள் நிறமாகலாம், உங்கள் வாய் பாசிப்பிடித்த கிணற்றைப்போல அழகான கருமை வண்ணத்திற்கு நிறம் மாறலாம்! தங்களின் அழகான வரிசையான் முத்துப்பற்கள் அருவருப்பான நிறச்சிதைவுக்கு ஆளாகலாம், அருகில் நெருங்கினாலே பல வருடங்கள் சுத்தம் செய்யப்படாத சாக்கடை நாற்றம் உங்களிடமிருந்து புறப்படலாம்! அதையெல்லாம் பெரிது படுத்தாதீர்கள், மன உறுதியோடு, செயல்படுங்கள், ஏனென்றால் அதெல்லாம் வெறும் சின்னச் சின்ன தூசுகள் தான், பின்னாளில் பெரிய பெரிய சீள்வடியும் நாற்றப் புண்கலெல்லாம் உங்களுக்காக வரிசையில் காத்திருக்கிருக்கின்றன‌ என்பதை மனதில் வைத்து மலையே அசந்தாலும், மனம் கலங்காது ,உறுதியாக புகைப்பது ஒன்றையே உங்கள் புனித நோக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்,முடிந்தால் சுகாதாரத்துறை வெளியிடும் அந்த பயங்கரமான் புகைப்பதால் ஏற்பட்ட அட்டகாசமான புன்களாலும், இரத்தப் புற்றுகளாலும் முற்றாக சிதைந்த உருவப் புகைப்படங்களை, வாங்கி அனுதினமும் பார்த்து, நாளை நம் கதியும் இதுதான் என மனதைத் தேற்றி கொள்ளுங்கள்! யார் தடுத்தாலும் கேட்காதீர்கள் (நீங்கல்லாம் சிங்கம்ல!, யார் பேச்சையும் கேட்க மாட்டிங்க) ஆனா பாருங்க இதுவரைக்கும் எந்த சிங்கமும் சிகரெட் பிடிச்சி செத்ததா, வரலாறு, விஞ்ஞானம், பூகோளம் எதுவுமே இல்ல! (அப்படின்னு நான் சொல்ல மாட்டேன், இந்த சமூக ஆர்வலர்கள் சொல்வாங்க, கண்டுக்காதீங்க!)

சரி சரி விட்டால் , புகைப்பதன் அருமை பெருமைகளை விடிய விடியப் பேசலாம், அவ்வளவு அற்புதமான விக்ஷயம் அது, ஆனாலும் பாருங்க, நான் உங்களுக்காக வரிந்து கட்டிக் கொன்டு இப்படி வாதாடியதற்கே எவ்வளவு கண்டனங்களை வாங்கிக் கட்டிக்கொள்ளப் போகிறேனோ தெரியவில்லை! அதனால் உங்களுக்கு மீண்டும் ஒரு சபாக்ஷ் சொல்லி விடைபெறுகிறேன். கூடிய விரைவில், மதுப்பழக்கம், போதைப்பழக்கம் போன்றவற்றை முற்றிலும் மாறான கண்ணோட்டத்தோடு, அவ்ர்களுக்கு சார்பாக பல பதிவுகள் எழுதுலாம் எனும் எண்ண்த்தோடு விடைபெறுகிறேன், நல்லாருங்கப்பா!

எச்சரிக்கை : நல்ல சமூக ஆர்வலரும், பினாங்கு பயனீட்டாளர் சங்க அதிகாரியுமாகிய அண்ணன் திரு.சுப்பாராவ் அவர்கள் http://nvsubbarow.blogspot.com/2009/06/blog-post.html தமது வலைப்பதிவில் புகைப்பதனால் ஏற்படும் தீமைகளைப்பற்றி அக்கு வேறு ஆணிவேறாக புட்டுப் புட்டு வைத்திருப்பதால் அதைப் படிப்பவர்கள் புகைப்பதன் தீமையை உணர்ந்து திருந்திவிடும் அபாயம் அதிகமாக இருக்கிறது, எனவே புகைபிடிக்கும் நண்பர்களும் ஏனைய பிற அன்பர்களும் அந்தப் பகுதிக்குச் சென்று அதை படித்து தங்கள் கண்டனத்தை தெரிவித்துக்கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், (நல்லதுங்க நான் போயிட்டு வரேன்)

2 comments:

Tamilvanan said...

ஒரு சிகரெட்.. க்குள்ள இவ்வளவு சிக்ரெட்டா (secret) இந்த மாதிரி ரகசியத்தெல்லாம் உடைச்சி உடைச்சி சொல்றப்ப தெளியவச்சி தெளியவச்சி அடிக்கிற மாதிரியே இருக்குதே..... ஆமா எது எதுல்லாம் நல்ல பிரண்டுன்னு ( friend இல்ல brand )கடைசி வரைக்கும் சொல்லவே இல்ல....யான்?

sivanes said...

//ஆமா எது எதுல்லாம் நல்ல பிரண்டுன்னு ( friend இல்ல brand )கடைசி வரைக்கும் சொல்லவே இல்ல....யான்?//

வாங்க தல, எனக்கு அடி வாங்கித் தராம ஓய‌வே மாட்டீங்க தானே ?