.

.
.

Tuesday, June 30, 2009

சிரிக்க சில நொடிகள்...


டைரக்டர் :"கதைப்படி வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுங்கிறமாதிரியான ரோல்!"
ஹீரோ : "அதாவது எதையும் கறாரா பேசுற ஹீரோ ரோலா?"
டைரக்டர் :"கிழிஞ்சது கிருக்ஷ்ணகிரி.. உங்களுக்கு கிடா வெட்ற பூசாரி ரோல்!"
ஹீரோ : ?????

அவர் : "இந்தப் படத்திலே ஹீரோ எல்லோரையும் குழி தோண்டிப் புதைச்சிடறான்"!
இவர் : "அதாவது சமூக விரோதிகளை ஒழிச்சுக்கட்டுறானா?"
அவர் : "சேச்சே ஹீரோவுக்கு வெட்டியான் கேரக்டர்!"
இவர் : !!!!!!

அவன் : " பந்தியிலே... அந்த 'வாஸ்து ஜோசியர் பக்கத்துல உட்கார்ந்து சாப்பிட்டது தப்பாப் போச்சு!"
இவன் : "என்ன ஆச்சு"
அவன் : "இலையில 'வடக்கு மூலை'ல ஸ்வீட் இருக்கக் கூடாதுன்னு சொல்லி, என் ஸ்வீட்டை எடுத்துத் தின்னுட்டாரு!"

அவன் : "தினமும் ஓயாம சண்டை போடுற என் அம்மாவையும் மனைவியையும் ஒரு திருடன் தான் சேர்த்து வைச்சான் "
இவன் : "எப்படி?"
அவன் : "ரெண்டு பேரையும் ஒரே கயித்துல கட்டிப் போட்டுத் திருடிட்டுப் போனான்"

அவன் : "ஹலோ ஐ லவ் யூ, நான் உங்களைக் கல்யாண‌ம் செய்துக்கலாம்னு நினைக்கிறேன்".
இவள் : "மன்னிக்கனும் நான் ஒரு குரங்கு குட்டிக்கு அம்மாவாக விரும்பல!"
அவன் : "நான் ஒரு வளர்ந்த குரங்குக்கு வாழ்க்கை கொடுக்கலாம்னு நினைச்சேன்...இட்ஸ் ஓகே!"
இவள் : ????????

அவன் : "லட்டுக்கும் புட்டுக்கும் என்ன வித்தியாசம்..?"
இவ‌ன்: தெரியலையே.."
அவன் : "லட்டை புட்டு சாப்பிடலாம், புட்டை லட்டு சாப்பிட முடியாது...!இவன் : !!!!

அவர் : "என் பையன் பண்ணிய காரியத்தால என்னால வெளிய தலை காட்ட முடியல..."
இவர் : "அப்படி என்ன பண்ணிட்டான்?"
அவர் : என்னோட விக்கை எடுத்து அவன் போட்டுகிட்டு போயிட்டான்"
இவர் : ?!!!

நோயாளி : "தலைவலி, காய்ச்சல், வாந்தி, பேதி, தலைச்சுற்றல், இருமல், சளி எல்லாம் இருக்கு டாக்டர்..."
டாக்ட‌ர் :"அதெல்லாம் ஒரு ப‌க்க‌ம் இருக்க‌ட்டும், என‌க்குக் கொடுக்க‌ வேண்டிய 'ஃபீஸ்' இருக்கா?!"

அவ‌ன் : "இருக்கா இல்லையான்னு புரியாத‌ப‌டி ஒரு வியாதி இருக்கு... அது எது?
இவ‌ன் : "தெரிய‌லையே"
அவ‌ன் " 'போலி'யோ"

நோயாளி : "டாக்ட‌ர்... எது சாப்பிட்டாலும் நெஞ்சுலேயே இருக்கு..."
டாக்டர் : "நிஜ‌மாவா"
நோயாளி : "ஆமாம் டாக்ட‌ர். வேணும்னா ஸ்கேன் எடுத்துப் பாருங்க‌. ஒரு வார‌மா எங்க‌ வீட்டுல‌ என்ன‌ ச‌மைய‌ல் ப‌ண்ணாங்க‌ன்னு தெரியும்"
டாக்ட‌ர் : ???????

அவ‌ர் : "என்ன‌தான் இருந்தாலும் க‌ட்டின‌ பெண்டாட்டிக்கு எதிரா நீங்க‌ கைநீட்ட‌க் கூடாது..."
இவ‌ர் : "யோவ்! அவ‌ அடிக்க‌ வ‌ரும்போது கையை நீட்டித் த‌டுக்காம‌ என்னை அடிவாங்க‌ச் சொல்றியா..."

அவர் : "மாப்பிள்ளை பெரிய சாஃப்ட்வேர் இஞ்ஜினியர்னு சொல்லி ஏமாத்திட்டாங்க சார்!"
இவர் : "என்ன சொல்றீங்க?"
அவர் : "அவர் மூலிகை 'வேர்களை சாஃப்ட்டா அரைச்சுக் கொடுக்கிற வைத்தியராம்.

அவர் : "எங்க வீட்டுல தினமும் மத்தியானம் ஒரு மணிக்கு சொர்க்கம்... ஒன்றரை மணிக்கு நரகம்!"
இவர் : "என்ன சொல்றீங்க?"
அவர் : "ஆமாம் தினமும் ஒரு மணிக்கு என் பெண்டாட்டி டிவி சீரியல் போடுவா... ஒன்றரை மணிக்கு சாப்பாடு போடுவா"
இவர்: !!!!

அவ்ர் : நம்ம தலைவரைப் பத்தி ஜனங்க நல்லா தெரிஞ்சு வெச்சுருக்காங்க"
இவர் : "எப்படி?"
அவர் : கரெக்டா காது குத்து நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க கூப்பிட்டுருக்காங்களே


Monday, June 29, 2009

வள்ளலாரும் வாழ்க்கை நெறிகளும்


வள்ளலார் காட்டிய வாழ்க்கை நெறிகள்

"வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்" என காரூண்யத்தை பூமியில் நிலைநாட்டியவர் திருவருட் பிரகாசர் எனும் வடலூர் வள்ளலார். இம்மகான் 5-10-1823 இப்புவியில் அவதரித்து அன்பின் வடிவமாய் அவனியில் வாழ்ந்து, மனித வாழ்வை மேம்படுத்தும் வாழ்க்கை நெறிகளை உருவாக்கித் தந்து, அற்புதங்கள் பல நிகழ்த்தி, அரிய போதனைகள் பல செய்து 30-1-1874(50 ஆண்டு 3 திங்கள் 25 நாட்கள்) நாளன்று வடலூர் சித்தி வளாகத் திருமாளிகையில் புற சோதியான அருட்பெருஞ் சோதியை ஏற்றி உலகத்து மானிடர்களுக்காய் வைத்து விட்டுத் தன் பொன்மேனியிலிருந்த ஆத்ம சோதிக் கதிர்களை எழுப்பி அதில் தன்னைக் கரைத்து ஒளிவடிவம் எனும் மரணமிலாப் பெருவாழ்வு எய்தியதாக வரலாறு கூறுகின்றது.இதோ வள்ளலார் மனித வாழ்வின் மேன்மைக்கு உருவாக்கிய சித்தாந்தங்கள் வாழ்க்கை நெறிமுறைகளாக உங்களது உபயோகத்திற்காக......

இறைநெறி


1.இயற்கையே இறைவர், அந்த இயற்கையை ஆளும் இறையான அருபெருஞ்சோதி ஆண்டவர் ஒருவரே! அவரை உண்மையாக நம்பி உணர்வோடு தியானித்தால் எல்லா நலமும் கிட்டும்.


2.சிவ‌ப் ப‌ர‌ம்பொருளாய் உள்ள இறை‌வ‌ரை எக்கார‌ண‌ங்கொண்டும் உருவ‌ழிபாட்டில் நிறுத்தாம‌ல் அக‌த்துள்ளும் அருட்பெருஞ்சோதியாயும், புற‌த்துள்ளும் அருட்பெருஞ்சோதியாயும் நினைந்து வ‌ழிப‌ட‌ வேண்டும்.


3.சிறு தெய்வ‌ வ‌ழிபாடுக‌ள் கூடாது அத்தெய்வ‌ங்க‌ளின் பேரால் உயிர்ப்ப‌லிக‌ள் கொடுத்த‌ல், ச‌ட‌ங்குக‌ள் கிரியைக‌ள் செய்த‌ல் போன்ற அனை‌த்தையும் நீக்குத‌ல் வேண்டும்.


4.புராண‌ங்க‌ளும், சா‌த்திர‌ங்க‌ளும் எல்லாக் கால‌ங்க‌ளுக்கும் பொருந்துவ‌ன‌வ‌ன்று அவை முடிவான‌ உண்மைக‌ளைக்கூற‌மாட்டா. என‌வே, புராண‌‌க்க‌தைக‌ளைநம்பி விழா எடுத்தல், கிரியைகளைச் செய்தல் முதலிய அனத்தையும் தவிர்த்தல் வேண்டும்.


5.எக்கார‌ண‌ங் கொண்டும் இறந்த‌வ‌ர்க‌ளுக்குக் க‌ருமாதி திதி, திவ‌ச‌ம் போன்ற‌ கிரியைக‌ளும் ச‌ட‌ங்குக‌ளும் செய்த‌ல் கூடாது. இறந்த‌வ‌ர்க‌ளை ம‌ண்ணில் ந‌ல்ல‌ட‌க்க‌ம் செய்க‌. தீயிட்டுச் சுட‌ல் வேண்டா.

6.திங்கள் தோறும் வரும் பூச நன்னாளில் இல்லங்களிலும், பொது இடங்களிலும் கூட்டு வழிபாடு, சோதி வழிபாடு நிகழ்த்தலாம், அருட்பா அகவல் ஓதலாம், ஏழைகட்கு அன்னமிடலாம். குழந்தைகளுக்குக் கல்வியுதவி செய்யலாம். சமன்மார்க்கிகள் தங்களின் ஆன்மா தேட்டங் குறித்துச் சிந்திக்கலாம்.


7.ஆண்டுதோறும் தைத்திங்களில் வரும் பூச நன்னாளில் வடலூர் சத்திய ஞான சபைக்குச் சென்று கூடி சோதி வழிபாடு செய்யலாம்!


8.எப்போதும், எவ்விட‌த்தும், "ப‌சித்திரு", "விழித்திரு" , "த‌னித்திரு" என்ற‌ பெரு நெறியை ம‌ன‌த்தெண்ணி எல்லாச் செய‌ல்க‌ளிலும் க‌வ‌ன‌ம் பேணி வாழ‌ வேண்டும்.


9.வ‌ழிப‌டும் முன்னும் பின்னும், எப்போதும் யாண்டும் "அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி த‌னிபெருங்க‌ருணை அருட்பெருஞ்சோதி" ம‌கா ம‌ந்திர‌த்தை ஓத‌வேண்டும். அருட்பெருஞ்சோதி கோடியின் அடியில் ம‌ன‌ங்கூடி நின்று செய‌ல்ப‌ட‌வேண்டும்


10.இன்ப‌மே சூழ்க‌, எல்லோரும் வாழ்க‌.




மனிதநெறி


1. உலகிலுள்ள அனைத்து உயிர்களும் ஆண்டவனின் படைப்பேயாகும். இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் கொள்ள ஒன்றுமில்லை. எனவே, இனம், சமயம், மார்க்கம் என்றோ சாதி, குலம், வருணம் என்றோ தங்களுக்குள் எள்ளளவும் பேதமுறக்கூடாது. அருட்பெருஞ்சோதி ஆண்டவரே அனைவர்க்கும் தாய், தந்தை, குருவாக உள்ளார்.


2.த‌ய‌வு, க‌ருணைக் கொன்டு அனைவரையும் நேசிப்ப‌துட‌ன் அற்றார் அழிபசி தீர்த்த‌ல், அக‌ப்பிணி, புற‌ப்பிணி போக்க‌ல் போன்ற‌ உயிரோழுக்க‌மே வீடுபேற்றைத்த‌ருகின்ற‌ அருள் முய‌ற்சிக‌ளாகும்.


3.புகை பிடித்த‌ல், ம‌து அருந்துத‌ல், புலால் உண்ண‌ல் மூன்றையும் க‌ட்டாய‌ம் நீக்க‌ப்ப‌டுத‌ல் வேண்டும். சூது, பேராசை, பொறாமை, ஆண‌வ‌ம், காம‌ம், கோப‌ம் த‌விர்த்து, வாழும் ஆன்ம‌நேய‌ ஒருமைபாட்டு வாழ்வே அற‌ங்க‌னிந்த‌ ப‌க்திவாழ்வாகும்.


4.சாதி, ச‌ம‌ய‌ப்ப‌ற்று நீங்கி ஆண்ட‌வ‌ர் ஒருவ‌ரே என்ப‌துபோல் ம‌னித‌குல‌ம் யாவும் ஒன்றே என்று உண‌ர்ந்து உல‌க‌ ஆண்ம‌ நேய‌ ஒருமைப்பாட்டுரிமை கொண்டு எவ்வுயிரும் த‌ம்முயிர்போல் எண்ணி தயவொழுக்கம் பேணி வாழும் ஒவ்வொருவரும் ச‌ன்மார்க்க‌ ச‌ங்க‌த்தின் அக‌ உறுப்பின‌ராவார்.

பொது நெறி

1.உழைத்துப் பொருளீட்டி உண்டுயிர்த்து வாழல் வேண்டும். வட்டி வாங்குதல் கூடாது. கிட்டியவரை எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்க முயல வேண்டும்.

2.ஒவ்வோருவரும் தாய்மொழியும் ‍ நாட்டு மொழியும் கற்றிருப்பதுடன் உலகத் தொடர்புக்கேற்ற ஒருமொழியையும் கற்றிருத்தல் வேண்டும்.

3.ஒவ்வொருவ‌ரும் அடிப்ப‌டைக்க‌ல்வியுட‌ன் வாழ்க்கை ந‌ட‌த்த‌ தன் அறிவிற்கு ஏற்ற‌தொரு தொழிற்க‌ல்வியும் க‌ற்றிருப்ப‌து முக்கிய‌ம். என‌வே, தொழிற்க‌ல்வி ப‌யிற்றுவித்த‌ல் வேண்டும்.

4.எல்லா மக்க‌ளுக்கும் திருக்குற‌ள் ந‌ன்நெறியுட‌ன் தியான‌ வ‌ழிபாடு, ச‌ம‌ய‌ம் ப‌ற்றிய‌ வ‌குப்புக்க‌லை ந‌ட‌த்துத‌ல் வேண்டும்.

5.ஒவ்வொரு நாளும் செய்யும் எல்லாப் பொது வேலைக‌ளிலும் அனை‌த்துக் குடும்ப‌க் க‌ட‌மைக‌ளிலும் ஒழுங்கும், அழ‌கும், நேர்மையும் மிளிரும்ப‌டியாக‌ச் ச‌த்திய‌மாக‌ச் செய்ய‌ வேண்டும்.


உணவு உடைநெறி
1.புலாலை முற்றாக நீக்க வேண்டும். மது அருந்துதல், புகைபிடித்தல் அவசியம் நீக்குதல் வேண்டும். பொருந்திய மரக்கறி உணவுகளையும், பழங்களையும் போதுமான அளவு உண்ணுதல் வேண்டும். இதனால் வாழ்நாள் முழுவது நோயின்றி வாழலாம்.


2.ப‌ருவ‌ கால‌த்திற்கும் த‌ட்ப‌ வெட்ப‌ நிலைக‌ளுக்கும் தொழிலுக்கும் ஏற்ற‌ உடைக‌ளை உடுத்திக் கொள்க‌! ஆனால் வ‌ழிபாட்டுக் கால‌ங்க‌ளில் வெள்ளாடையே அணிந்து கொள்க. வெளியில் காலில் செருப்பணிந்து செல்க.

3.காப்பி, தேநீர் நீக்குக‌. பால், இளநீர், வெந்நீர் அருந்திப் பழகுக. எதிலும் அளவும் நிதானமும் பெறுக.




Saturday, June 27, 2009

அவசர யுகத்தின் அந்தி மந்தாரைகள்!



நவநாகரீக யுகம், விஞ்ஞானத்தின் விளிம்பு நிலை வாழ்க்கைத்தரம் கணினியுகப் புரட்சிகள், பணத்தின் ஆளுமையில் முழுதாக தங்களைப் பறிகொடுத்து வாழும் மனித வாழ்வு. தனிமனித வாழ்வே இவற்றோடு தகிடு தத்தம் ஆடிக்கொன்டிருக்கும் நிலையில் குடும்பம், பெற்றேடுத்த பெற்றோர், பெற்று விட்ட குழந்தைகள் எனத்தொடரும் உறவுகள்!
குழந்தையாய் பிறக்கிறோம், பெற்றோர் தயவில் வளர்ந்து, படித்து, பிறகு வேலை, திருமணம், பிள்ளை குட்டிகள், அவர்கள‌து எதிர்காலம் எனத்தொடங்கி 20 தொடங்கி 60 வரை கடமையே கண்ணாக வாழ்ந்து ஒரு வழியாக முடிந்தளவு வாழ்வோடு போராடி கடைசியாக "பிரச்சனைகளெல்லாம் முடிந்துவிட்டதடா சாமி"! என முதுமையில் எல்லோராலும் நிம்மதியாக பெருமூச்சு விடமுடிகிறதா? பலருக்கு அங்கேதானே பிரச்சனையே ஆரம்பமாகின்றது!


இன்று நாம் காணும் முதியோர்களில் சில ரகம் உண்டு. பலர் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு தங்கள் குடும்பத்தோடு ஐக்கியமாகி இறுதிவரை குடும்பத்தோடு வாழந்து கண்மூடுபவர்கள். தங்களைச் சார்ந்தவர்களால் நல்முறையில் நடத்தப்படும் இவர்கள் பாக்கியசாலிகள். ஆனால் சில முதியோர் சாறு பிழிந்தபின் தூக்கியெறியப்படும் சக்கையைப்போல் அவர்களின் உழைப்பு, கையிருப்பு என அனைத்தும் தீர்ந்தபின் அல்லது சுரண்டப்பட்ட பின் தங்கள் மக்கள் எனும் மாக்களாலேயே வீதியில் வீசியெறியப்பட்டவர்கள். இவை இரண்டிலும் சேராத மற்றொரு ரகம் உண்டு. அது திருமணம் இன்றி தனிமை வாழ்க்கைக்கு ஆட்பட்ட முதியோர், இவர்களில் சிலர் தமது சொந்த பந்தங்களோடு ஒட்டிக்கொன்டு இறுதிகாலத்தை ஓட்டுவர், ஏனைய பிறர் நிலை? தனிமை வாழ்வுதான்!


இன்றைய வாழ்க்கையில், பணம் படைத்தோரே எல்லா வகையிலும் சிறப்பாக வாழ முடிவதைக் காண முடிகிறது. பணம் படைத்த முதியோர் தங்கள் இறுதிக்காலத்தை ஒரளவு சுமூகமாக கழித்துவிடக்கூடிய வாய்ப்பு உள்ளது. பணம் படைத்தவரை யார்தான் வெறுப்பார்? எல்லோரும் ஒட்டிக்கொன்டு உற‌வாடுவார்கள். சொல்வதைக்கேட்டு சேவகம் புரிவார்கள்! நோயுற்றால் மேன்மையான மருத்துவம், வீட்டிலேயே தாதியை வைத்து தேவைகளை நிறைவேற்றும் நிலை. இல்லாவிட்டால் கூட விலையுயர்ந்த காப்பகங்களில் தங்குவது என இறுதிக்காலத்தை வசதியாக எதிர்கொள்ளலாம், ஆனால் வாய்க்கும் கைக்குமாக வாழ்ந்த சராசரி முதியோர்கள் நிலை?


நடுத்தர வர்க்கத்துப் முதியோர்களில் பலர் தங்களது இறுதிக்காலத்தை மனதில் கொள்ளாது தங்களது சேமதிதிப்பணத்தை வீடு வாங்கவும், தங்களது பிள்ளைகளின் மேற்படிப்புக்காகவும் செலவிட்டு விடுகின்றனர். தங்கள் பிள்ளைகள் அதிலும் போற்றி போற்றி வளர்த்த தங்கள் ஆண் பிள்ளைகள் தங்களை என்றும் கைவிட மாட்டார்கள் எனும் அசாத்திய நம்பிக்கை. ஆனால் நட்ட விதை எல்லாமா நல்ல பலன் தந்து விடுகிறது? சிலர் நன்றி மற‌ந்து, மனிதாபிமானம் இழந்து நடுத்தெருவில் விட்டு விடுகிறார்களே தங்கள் பெற்றோர்களை! வாய்ப்புக் கிடைத்தால் முதியோர் இல்லங்களுக்குச் சென்று அவர்களோடு பேசினால் தெரியவரும் பல கல்நெஞ்சக்கார பிள்ளைகளால் விளைந்த கண்ணீர் கதைகள். சினிமாவையே மிஞ்சிவிடும் சுருங்கிய முகத்தோடும், வருந்திய மனதோடும் அவர்கள் சொல்கின்ற வாழ்க்கைச் சுய ச‌ரிதைகள்!

முந்தைய காலங்களில் இருந்ததைப்போல கூட்டுக்குடும்ப வாழ்க்கைகள் தற்பொழுது மிகமிக குறைவே. வளர்ந்துவிட்ட பிள்ளைகளை வீட்டைவிட்டு வெளியேற்றி விட்டு அவரவர் கையை ஊன்றி அவரவர் பிழைத்துக்கொள்ள‌ வேண்டும் என்பது மேற்கத்திய நாடுகளின் பரவலான வாழ்க்கை முறை. அங்கே யாரும் யாரையும் சார்ந்து வாழ்வது மிகவும் குறைவு அல்லது அரிது!. நமது பிள்ளைகள் மட்டுமென்ன ? புத்திசாலிகளாயிற்றே விட்டு விடுவார்களா இதுபோன்ற வாழ்க்கையை? நல்ல நிலை வாய்த்துவிட்டால் தாங்களும் தனித்து வாழ வேண்டும் எனும் எண்ணம் பலருக்கு ஏற்பட்டு விடுகிறது, இதில் பெரும் பங்கு வீட்டுக்கு வாய்த்த மருமக்களின் உபயம். (கவனிக்க நான் எல்லோரையும் சொல்லவில்லை, பல நல்ல பிள்ளகள் நாடு முழுதும் இருக்கிறார்கள், நான் இங்கே குறிப்பிடுவது முதியோர் இல்லத்தில் வாடுபவர்களின் பிள்ளைகளை) .

பிள்ளைகள் எப்போழுதோ விழித்துக்கொன்டார்கள், அப்படியானால் முதியோர்களும் சுதாரித்துக் கொள்ள வேண்டாமோ? தங்களது இறுதிக்காலத்தை மனதில் கொன்டு சில முன்னேற்பாடுகளை சிரமம் பாராது செய்து கொள்ள வேண்டும், கையிருப்பை கண்மூடித்தனமாக செலவிடக்கூடாது, ஓரளவுக்கு பிள்ளைகளை படிக்க வைத்து பிறகு அவர்கள் சுய முயற்சியில் முன்னேற வழிகாட்ட வேண்டும். முதுமைகால சேமிப்புத்திட்டங்கள் பல வங்கிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது, முடிந்தவரை யாரையும் எதிர்பார்க்காமல் சிறிதேனும் சேமியுங்கள். உடலில் வழுவிருந்தால் வயதானாலும் உங்களுக்கேற்ற தொழிலை செய்வதற்குத் தயங்காதீர்கள் (யாருடைய கட்டாயத்தின் பேரிலும் இல்லாமல் உங்களது சுய விருப்பத்தின் பேரில்). உடல் நலத்தைப் பேணுங்கள், இறை வழிபாட்டில் சிந்தனையை செலுத்துங்கள். இவற்றையெல்லாம் விட மிக மிக ஆரோக்கியமாய் விளங்குகிறீகளா, உங்கள் கவனத்தை சமுதாயத்தின் பால் திருப்புங்கள், உங்களது அன்பும் பராமரிப்பும் இந்த சமுதாயத்திற்கு என்றென்றும் தேவை என்பதை உணர்ந்து பல நல்ல இயக்கங்களில் இணைந்து செயல் படுங்கள் .


முதியோர்களே நம்புங்கள், நீங்கள் அற்புதமானவர்கள், வாழப்பிறந்த எல்லா உயிர்களுக்கும் முதுமையை இறைவன் பரிசளிப்பதில்லை, சிலர் வாழ்வில் முதுமை வரும் முன்னரே வாழ்வு முடிந்து விடுகிறது! புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் அற்புதமானவர்கள், வாழ்வை ஆண்டு முடித்த அநுபவசாலிகள். ஒரு அப்துல் கலாம், ஒரு வாஜ்பாயி என மண்ணில் ஆளப் பிறந்தவர்கள். முன்னேற்பாடுகளோடு உங்கள் இல்லங்களையும் உள்ளங்களையும் மகிழ்ச்சியால் நிரப்பிக்கொள்ளுங்கள். முடிந்தால் உங்கள் காலம் முடியும் வரை விழுது விட்ட ஆலமரமாய் உங்கள் தயவில் பல இளம் உயிர்கள் (பேரக்குழந்தைகள்) இளைப்பார வகை செய்யுங்கள், தயவு செய்து உங்கள் பிள்ளைகளை மட்டுமே நம்பி முதியோர் இல்லங்களை நிரப்பாதீர்கள்...

பி.கு : இந்தப் பதிவு முதியோராகிவிட்ட நமது பெறோர்களுக்கு மட்டுமல்ல, நாளை அந்தப் பதவியை அடையப்போகும் நமக்கும் சேர்த்துத்தான் :-)

Thursday, June 25, 2009

பந்தம்



"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்". உண்மை அன்பு உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளிப்படுவது, போலித்தன்மை அற்றது, பிரதி பலனை எதிர்பார்க்காதது. எந்த சந்தர்பத்திலும் பழிவாங்காதது! தனக்கு வேண்டியவரை தண்டிக்காதது! இதோ அப்படிப்பட்ட‌ அன்பை பிரதிபலிக்கும் ஒரு சம்பவம்...
பலதரப்பட்ட மக்கள் வாழும் ஆரவாரமிக்க பெரிய நகரம், அங்கே வகை வகையாய் வீடுகள், வாழ்க்கை வசதிகள் மற்றும் உல்லாச வசதிகள். பல விதமான வாழ்க்கைத்தரங்களை கொன்ட மனிதர்கள். அவர்களில் சிலர் மாட மாளிகைகளையும், அடுக்குமாடி வீடுகளையும் கொன்டிருந்தனர்.அதில் ஒரு இளஞ்சிவப்பு அடுக்குமாடி வீடு ஒன்று! அதில் ஒரு அழகான குட்டி குடும்பம், அம்மா அப்பாவோடு மூன்றரை வயது முகிழன்! நமது கதையின் கதாநாயகன்.
அந்த குடும்பத்தலைவன் தன் இளமைகாலத்தை மிகவும் சிறப்பாக செயல்படுத்தி நல்ல கல்வி, உத்தியோகம், வச்தியான வாழ்க்கை என குடும்பத்தை வழிநடத்தி வந்தான், அவன் மனைவியும் நன்கு படித்தவள், எனினும் வீட்டிலிருந்து குடும்பத்தையும், குழந்தையையும் பராமரித்து வந்தாள். ஒரளவு பெசும் திறமை பெற்ற முகிழனுக்கு அவன் தாய் பாலர் பள்ளி பாடல்களை அனுதினமும் கற்றுக்கொடுத்து வந்தாள். அவனும் தன் மழலைக்குரலில் தனக்குத் தோன்றிய வகையில் அப்பாடல்களைபாடி தன் பெற்றோரை மகிழ்ச்சியில் ஆழ்த்துவான்
இத்தகைய இனிய சூழலில் முகிழனின் தாய் மீண்டும் தாய்மையடைந்தாள். அவ்ளும் அவள் கணவனும் ஆண‌ந்ததில் ஆழ்ந்தனர், எற்கனவே ஒரு ஆண் வாரிசு இருப்ப‌தால், அடுத்து பிறக்கப்போவது பெண்ணாக இருக்க வேண்டுமென இறைவனை வேண்டிக்கொண்டனர். முகிழனுக்கும் அவனுக்குத் துணையாக ஒரு குட்டி பாப்பா வரப்போவதை தெரிய‌வைத்து மகிழ்ந்தனர்.
தாயின் அருகாமை இருந்தாலும் தன் கூட ஒடிப்பிடித்து விளையாடவும், பாடல் பாடி மகிழவும் விரைவிலேயே வேறோரு பாப்பா வரப்போவது அவன் மனதில் ஆணந்தத்தை விதைத்திருக்கவேண்டும். அவனும் தன் இளவலை எதிர்நோக்கிக் காத்திருக்கத்தொடங்கினான்
நாட்கள் நகரத்துவங்கின, முகிழனின் தாய் தாய்மையின் மாற்றங்களை அடைந்துகொன்டிருந்தாள். இந்நிலையில் முகிழனுக்கு அவன் பாப்பாவிற்கான பாடல் ஒன்றைக் கற்றுக்கொடுத்தாள். அன்றிலிருந்து அவனும் தினம் ஒரு முறையாவது தன் தாயிடம் அந்தப் பாடலை பாடிக்காட்டுவான், அவன் தாயின் கூற்றுப்படி தன் தம்பியோ, தங்கையோ தன் பாடலை கேட்கிறார் எனும் நம்பிக்கையோடு.....
எதிர்பார்த்த நாளும் விரைந்து வந்தது, முகிழன் தாய் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டாள். பல மனி நேரம் துன்புற்று, அறுவை சிகிச்சையின் வழி ஒரு பெண் மகவு பிறந்தது. அதன்பிறகு தான் சோதனையே ஆரம்பமானது!, அந்த சிசுவை பறிசோதித்த மருத்துவர் அந்தக்குழந்தையின் உள்ளுருப்புக்கள் மிகவும் பலவீனமடைந்திருப்பதாகவும், அதிக பட்சம் ஒரு வாரம் வரை கூட அக்குழந்தை தாக்குப்பிடித்து உயிர்வாழ்வது கடினம் எனவும் தெரிவித்தனர். முகிழன் குடும்பம் மொத்தமாய் நொருங்கிப்போனது! இதயம் கனக்க, வேதனை எல்லை மீறி விழிகள் கண்ணீரை சொரிந்தன, என்ன செய்வது? இதுதான் வாழ்க்கை, எல்லாமே இயல்பாய், சிறப்பாய் நடந்து வரும் போது எங்காவது ஒரு மூலையிலிருந்து ஒரு இடி வரும், புயல் வரும், மின்னலுடன் கூடிய மழை வரும் அதுவரை திரும்பிப் பாராமலேயே முன்னோக்கி மட்டுமே ஓடிக்கொன்டிருந்த வாழ்க்கையிலிருந்து ஒரு நொடி நிறுத்திவைத்து திகைக்க வைக்கும்!

ஓரிரு நாட்கள் கடந்தன. குழந்தை தீவிர கண்காணிப்பு பிரிவில்! சின்ன அதன் உடலில் குழாய்கள் பொருத்தி மருந்து வகையறாக்கள் உட்செழுத்தப்பட்டுக் கொன்டிருந்தன! முகிழன் தாய் ஓரளவு தேறி வீட்டுக்கு அனுப்பப்பட்டாள்! ஆனால் குழந்தை மருத்துவமனையிலேயே தொடர்ந்து தங்க வைக்கப்பட்டது.
தன் தாய் த‌ன் சகோதரன் அல்லது சகோதரியோடு வருவாள் என எதிர்பார்த்து ஏமார்ந்த முகிழன் தன் தாயை நச்சரிக்கத்துவங்கினான், என்ன சொல்லியும் கேளாமல் அவன் தொல்லை எல்லை மீறலானது.
பொறுத்துப் பொறுத்து பார்த்த தாய், உன் தங்கை மருத்துவமனியில் உள்ளால் நீ கூடிய விரைவில் அவளை சென்று காணலாம் என ஆசை வார்த்தைகளால் அடக்கப்பார்த்தாள், அவன் அடங்கினால் தானே? உடனே தன் தங்கையைச் சென்று காண வேண்டுமென்றும் அவளுக்கான தன் பாடலை அவளிடத்தில் பாட வேண்டுமெனவும் கெஞ்சத்துவங்கினான், எற்கனவே மன உளைச்சல், உடல் நோவு, இதில் இவன் வேறு! என்னதான் செய்வது, கணவனும், மனைவியுமாய் யோசித்தார்கள், ஆமாம் புதிதாய் பிறந்த அந்த பிஞ்சு இன்னும் சில நாட்களில் காலமாகிவிடும் என மருத்துவர்கள் நாள் குறித்துவிட்டனர், இப்போது விட்டால் முகிழன் தன் உடன் பிறப்பை பிறகு எப்போது பார்க்க முடியும்?
சரி வருவது வரட்டும் எப்படியாவது முகிழனை அவன் சகோதரியுடன் சந்திக்க வைக்க ஏற்பாடானது
மறுநாள் யாரும் அறியா வண்ணம் முகிழனை அந்த சிகிச்சை அறைக்குள் அழைத்துச்சென்றாள் அவன் தாய், அந்நேரம் பார்த்து அங்கு வந்த தலைமைத் தாதி தன் இரட்டை நாடி சரீரம் கனகனக்க அவர்களிடம் ஓடிவந்து, விழிகளை உருட்டி ஏசத்துவங்கினாள், இந்த அறைக்குள் குழந்தைகளை அழைத்து வரக்கூடாது தெரியுமா? டாக்டருக்குத் தெரிந்தால் திட்டுவார் அழைத்துப்போ வெளியே, என கர்ஜித்தாள்.
வேறு வழியில்லை, மகிழன் தாய் அந்த தாதியை முறைத்துப்பார்த்து" இவன் தன் தங்கையை சந்திக்க வேண்டும், அவளுக்கான பாடலை இவன் பாடாமல் இங்கிருந்து நாங்கள் போகமாட்டோம்" என்றாள். அவள் பதிலுக்குக் காத்திராமல் அவனை அந்தக்குழந்தை அருகே அழைத்துச்சென்றாள், கண்ணாடிக்கூண்டை விலக்கி அக்குழந்தையை தொடச்செய்தாள்!
முகிழன் சிறியதாய் கண் திறவாது படுக்கையில் கிடத்தப்பட்டிருந்த தன் தங்கையை உற்று நோக்கினான், மெல்ல தன் சின்னக்கையால் அவளது வாடிப்போன குட்டிக்கையை தொட்டுப்பார்த்தான், பின்னர் மெல்ல தன் சின்னக்குரலில் அவளுக்கான தனது பாடலை, தான் எப்போதும் தாய்முன் தன் உடன்பிற‌ப்புக்காக பாடிய அந்தப்பாடலை பாடத்துவங்கினான், என் கண்ணே, மணியே, உனக்கான என் பாடல் எனத்துவங்கும் அந்தப்பாடல் அந்த அறையின் அமைதியைக் மெல்ல கிழித்துக்கொன்டு காற்றில் வியாபித்தது!

அவன் மெய்மறந்து பாடிக்கொன்டேயிருந்தான், கண்கள் மூடி தன் உள்ளத்து அன்பையெல்லாம் கொட்டி, என்ன ஆச்சர்யம்! பாடல் வரிகள் இழையோட அதுவரை படுக்கையில் அசைவற்றுக் கிடந்த அக்குழந்தையிடம் மெல்ல இலேசான அசைவு எழுந்தது, அதைக்கண்ட அவன் தாயும் தாதியும் அதிர்ச்சியில்..அவன் தாய் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த இயலாமல் அழுது கொன்டே அவனருகில் நின்று அந்த அதிசயத்தை காண்கிறாள். பாடல் வரிகளோடு, அந்த சிசுவின் மிக மிக மெல்லிய அசைவுகளோடு பாடல் தொடர்கிறது..., தாதி தனை மற்ந்து கண்களில் வழிந்த நீரோடு, அந்த குழந்தை அருகில் சென்று பரிசோதிக்கிறாள்..., இறக்கப்போகும் குழந்தை என முடிவெடுக்கப்பட்ட அந்த சிசு சன்னமான மூச்சு இழையோட உயிர்க்காற்றை மருத்துவ உதவியின்றி சுவாசித்தபடி உயிரோடு உயிராக...உயிர் மீளப்பெற்றிருந்தது..... தன் சகோதரனின் பாடலைக்கேட்டு...




‍‍‍‍

Wednesday, June 24, 2009

கண்ணதாசன் சிந்தனைகள் III

காற்றுக்கு இலைகள் அசைகின்றன,
மலர்கள் அசைகின்றன, ஆனால்
மலைகள் அசைவதில்லை!
பேசாம‌ல் இருப்ப‌து பெரும் திற‌மை, பேசும் திற‌மையைவிட அது மிக‌ப்பெரிய‌து! நிறை‌ய‌பேசுகிறவன் தன் வார்த்தைக‌ளாலேயே காட்டிக்கொடுக்க‌ப்ப‌டுகிறான். ச‌ள‌ச‌ள‌வென்று பேசுகிற‌வ‌ன், எவ்வ‌ள‌வு பெரிய‌ கெட்டிக்கார‌னாக‌ இருந்தாலும், சொற்பொழிவாள‌னாக‌ இருந்தாலும் த‌ன் ப‌ல‌வீன‌த்தைக்காட்டிக்கொள்கிறான், மெள‌னி முட்டாளாக‌ இருந்தாலும் ப‌ல‌சாலியாக‌க்காண‌ப்ப‌டுகிறான்.
ஒன்றைச்சொல்ல வேண்டும் என்று விரும்பி அதைச்சுருக்கமாக தெளிவுபடுத்துகிறவன் பெரிய மரியாதையைப்பெற்றுவிடுகிறான்.சிறிய விடயத்தைக்கூட‌ வளைத்து வளைத்து பேசுகிறவன் கேலிக்கு ஆளாகிறான். ஞானிகள் சில விடயங்களைக்கூறுகிறார்கள் அவை பொன்மொழிகளாகி விடுகின்றன‌. பைத்தியக்காரர்கள் பதினாயிரம் பேசுகிறார்கள் அவை சீந்துவாரில்லாமல் போகின்றன.
மெள‌னம் ஒரு மகத்தான ஞானம், அது தெய்வீகக்கலை. ஆரவாரங்கள் வெறும் மயக்கங்கள்." இவர் கொஞ்சம் பேச மாட்டாரா" என உலகை ஏங்கவிட வேண்டும், பேசத்தொடங்கினால் உலகம் கூர்ந்து கேட்க‌ வேண்டும். சலனமற்ற மெளனம் பல அர்த்தங்கள் கொன்டது. பேசாமல் இருப்பவனே பெரிய விடயத்தைச்சொல்பவன், பேசிக்கொன்டிருப்பவன் "ஞானக்கிறுக்கன்"

ஏராளமான‌ வரிகளைக்கொன்ட இலக்கியங்களைவிட ஏழு வார்த்தைகளில் அடங்கிவிட்ட திருக்குறள் உலகைக் கவர்ந்து விட்டது. காலந்தோறும் துணைக்கு வருகிறது, நிலையான தத்துவதைச்சொல்கிறது.
மனிதர்களை விட பல மிருகங்களுக்கு அதிக வயது, அவற்றைவிட மரங்களுக்கு அதிக வயது, அவற்றைவிட மலைகளுக்கு அதிக வயது, காரணம் அவை பேசாமலும் அதிர்ச்சி அடையாமலும் இருப்பதே!

பி.கு : பல நேரங்களில் பேசாமலிருப்பது நன்மை என்றாலும் சில சமயங்களில் பேசவேண்டிய விடயங்களை பேசவேண்டிய நேரத்தில் பேசவேண்டிய இடத்தில் பேசியே ஆக வேண்டும்.!

Monday, June 22, 2009

எண்ணும் எழுத்தும்



அண்மையில் அஞ்சலில் வந்த அற்புதம் இது! எண்களுக்குத்தான் எத்தனை எத்தனை பெயர்கள். சில வித்தியாசமாக, சில ச‌ராசரி உபயோக வார்த்தைகளாக, நீங்களும் படித்து ரசித்து பாருங்களேன்!


1 = ஒன்று -one

10 = பத்து -ten

100 = நூறு -hundred

1000 = ஆயிரம் -thousand

10000 = பத்தாயிரம் -ten thousand

100000 = நூறாயிரம் -hundred thousand

1000000 = பத்து நூராயிரம் - one million

10000000 = கோடி -ten million

100000000 = அற்புதம் -hundred million

1000000000 = நிகற்புதம் - one billion

10000000000 = கும்பம் -ten billion

100000000000 = கனம் -hundred billion

1000000000000 = கர்பம் -one trillion

10000000000000 = நிகர்பம் -ten trillion

100000000000000 = பதுமம் -hundred trillion

1000000000000000 = சங்கம் -one zillion

10000000000000000 = வெல்லம் -ten zillion

100000000000000000 = அந்நியம் -hundred zillion

1000000000000000000 = அர்த்தம் -??????

1000000000000000000 0 = பரார்த்தம் --anybody know?

1000000000000000000 00 = பூரியம் -<>?#%^&

1000000000000000000 000 = முக்கோடி -&^*^%^#

1000000000000000000 0000 = மகாயுகம் -???????????? ????

அடடா, என்னே எம் தமிழின் அருமை என பெருமைகொள்ளத்தோன்றுகிறது அல்லவா?

"தாயே த‌மிழே உனை வாழ்த்த‌ வ‌ய‌தில்லை, வ‌ண‌ங்கித்தாள் ப‌ணிகிறேன்"

இளைய சமுதாய முன்னேற்றத்தில் பெற்றோர்!


இன்றைய இளைய சமுதாயத்தில் மலிந்து வரும் சமூகச்சீர்கேடுகளுக்கு பெற்றோர்களும் பெரும் காரணம்! ஆமாம், தங்கள் பிள்ளைகளின் தவறுகளுக்கு அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் உடந்தையாக இருக்கும் பெற்றோர்களை வேறெப்படி வகைப்படுத்துவது?

த‌ற்கால‌ச்சூழ‌லில் சில‌ர் திருமண‌‌மே வேண்டாம் என்கின்ற‌ன‌ர், சில‌ரோ திருமணம் முடித்தும் தங்கள் சுய வளர்ச்சிக்காக‌ குழந்தை வேண்டாம் எனும் முடிவைத் தேர்ந்தெடுத்துக்கொள்கின்ற‌ன‌ர், ஏனைய‌ பிற‌ர்தான் வாழ்வில் இணைந்து குடும்பத்தை உருவாக்கி குழந்தைகளையும் பெற்றுக்கொள்கின்றனர். பெற்றோர்களாகும் இவர்களுக்கு முதலில் நமது பாராட்டுக்கள்!

எனினும் பத்து மாதம் சுமந்து பாலூட்டி, சீராட்டும் தாயாகட்டும், இரவு பகல் பாராது உழைத்து ஒடாய் தேய்ந்து குடும்பத்தை வழிநடத்தும் தந்தையாகட்டும், குழந்தைக‌ளை வ‌ள‌ர்ப்ப‌தில் முத‌ல் தெய்வ‌ங்க‌ளாகிய இந்த பெற்றோர்க்கு உள்ள‌ ப‌ங்கு அள‌விட‌ற்க‌ரியது. குழந்தைக‌ளை பெற்று, வ‌ள‌ர்த்து, கல்வியைத் தந்துவிடுவதோடு முடிந்து விடுவதில்லை இவர்களின் கடமை. தமது பிள்ளைகளை நாட்டிற்கும் வீட்டிற்கும் ஏற்புடைய‌ ந‌ல்ல‌ மாந்த‌ர்க‌ளாக‌ வ‌டிவ‌மைப்பதும் பெற்றோர்க‌ளாகிய‌ இந்த‌ சிற்பிகளே!

ஏன் இப்போதைய இளையோர்கள் புகை, ம‌து, போதை, தவறான உறவு, கொலை மற்றும் கொள்ளை போன்ற‌ தீய‌ப்ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்க‌ளுக்கு வெகு விரைவில் அடிமையாகி விடுகின்ற‌ன‌ர்? ஆங்கிலேயன் கற்றுத்தந்த நற்பன்புகளைவிட அவன் விட்டுச்சென்ற "ம‌ஞ்ச‌ள் க‌லாச்சாரம்" ஏன் ந‌ம‌து இளையோரை பேயாய் பிடித்து ஆட்டி வைத்துக்கொன்டிருக்கிற‌து?

இன்றைய‌ இளையோர் ப‌ல‌ர் பிஞ்சிலே ப‌ழுத்து, பழமாகும் முன்பே வெம்பிப்போய்விடுகின்ற‌ன‌ர். பல‌ குற்ற‌ச்செய‌ல்க‌ளைப் புரிகின்ற‌ன‌ர், அத‌ற்குப் ப‌ல‌னாய் ப‌ல‌ த‌ண்ட‌னைகளாக சிறை‌வாச‌ம், நோய்க‌ள், ம‌ர‌ண‌ம் போன்ற‌‌வற்றை‌ப்ப‌ரிசாக‌ பெற்றுக்கொள்கின்ற‌ன‌ர்! பெற்ற‌வ‌ர்க‌ளைப்ப‌ரித‌விக்க‌ விட்டு பாதியிலேயே வாழ்வை பாழாக்கிக்கொள்கின்ற‌ன‌ர்!

இதற்கெல்லாம் வழிவகுப்பது கூடா ந‌ட்பு, சினிமா மற்றும் சுற்றுச்சூழல் என காரணம் காட்டி பெற்றோர் தப்பித்துவிட முடியாது! குழந்தைகளை சிறு வயது முதலே சிறப்பான முறையில் வளர்த்தெடுக்க பெற்றோர் அவ‌சியம் பாடுபடவேண்டும்.

தாங்கள் பெற்ற பிள்ளைகளின்பால் அலட்சியத்தையும் அக்கறையின்மையையும் காட்டும் சில பெற்றோர்களின் செயல்பாடுகளை கவனிக்கும் பொழுது, அதைவிட அவர்கள் பிள்ளைகளை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதே நல்லது எனத்தோன்றுகிறது, உலகில் 15% தம்பதியர் பிள்ளைகள் இன்றி வாடுகின்றனர், ஆனால் இவர்களோ தமக்குக் கிடைத்த விலையில்லா வைரங்களை வீதிகளில் வீசியெறியும் பாவிகள். அக்கறையில்லாமல் பரிதவிக்கவிடப்படும் பிள்ளைகளில் சிலர் சமூக நல இல்லங்களையும் ஏனைய பிறர் பல சிறுவர் சீர்திருத்தப்பள்ளிகளையும் நிரப்பிக்கொன்டிருக்கின்றனர். இப்படி குழந்தைகளை உதாசீனப்படுத்தும் பெற்றோர்களுக்கு கடுமையான தண்டனையை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும்!

இவர்கள் இப்படியென்றால் இதற்கு முற்றிலும் மாறானவர்கள் சில பெற்றோர்கள். இவர்கள் "நான் இளமையில் ரொம்ப கக்ஷ்டப்பட்டேன், அதே நிலை என் பிளைகளுக்கு வரக்கூடாது, அவர்களுக்கு வருத்தம் என்றால் என்னவென்றே தெரியக்கூடாது" என்பார்கள். அதீத அன்பால் தமது பிளைகள் கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுத்து, அவர்கள் நினைப்பதையெல்லாம் நிறைவேற்றும் இத்தகைய‌ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நன்மையைவிட தீமையையே அதிகம் செய்கின்ற‌‌னர். வருத்தம் தெரியாது வளரும் பிள்ளைகள் வாழ்க்கையை புரிந்துகொள்வது சிரமம். பிற‌ர் வ‌ருத்த‌ங்க‌ளை உண‌ர்வ‌தும் க‌டின‌ம். அதற்காக அவர்களது எல்லா தேவைகளையும் நிராகரிக்கவேண்டும் என்பதில்லை. எது அவர்களுக்கு தேவை என்பதை உணர்ந்து நிறைவேற்ற் வேண்டும்

தமது பிள்ளைகளின் நியாமான உணர்வுகளுக்கு பெற்றோர் பூரண மதிப்பளிக்கவேண்டும் அதேவேளை, அவர்கள் பெற்றோரின் அன்புக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டும் எனும் எண்ணத்தையும் அவர்கள் மனதில் விதைக்க வேண்டும், நல்ல பண்புகள், பழக்க வழக்கங்கள் மற்றும் இறை சிந்தனை எனும் பாதையில் அவர்களை சீராக வழிநடத்த பெற்றோர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். பிள்ளை பெற்றவர்களெல்லாம் சிறந்த பெற்றோர் அகிவிடுவதில்லை, தமது வாரிசை முன்னேற்றப்பாதையில் வழிந‌டத்துவதில் வெற்றிகண்டவரே சிறந்த பெற்றோர்!

வேலை செய்யும் தந்தை அல்லது பெற்றோர் முடிந்தவரை ஒவ்வொரு நாளும் குழந்தைகளுடன் சிறிது நேரத்தை செலவிட பழக வேண்டும், நான் உனக்காகத்தான் உழைக்கிறேன் என்று தியாகி சீனெல்லாம் போட்டு அவர்களிடமிருந்து விலகி நின்றால், தயவு செய்து இப்பொழுதே உங்களுக்கு ஒரு முதியோர் இல்லத்தில் இடம் தேடி வைத்துக்கொள்ளுங்கள்! உங்கள் பணம் ஏற்படுத்தும் பாசப்பிணைப்பை விட உங்கள் அருகாமை பல மடங்கு அன்பை விதைத்து குழந்தைகள் உங்களை உயிராகவும், உயர்வாகவும் மதிப்பிடத்தூண்டும்.

ஒரு கைதேர்ந்த சமையல்காரன் தன் சமையல் ருசிக்க உப்பு, உறைப்பு, புளிப்பு எனும் அனைத்தையும் அளவோடு சேர்த்து பதப்படுத்தும் போதுதான் ஒரு நல்ல பதார்த்தத்தை அவனால் படைக்கமுடிகிறது, அதைப்போல‌வே அன்பு, அக்கறை, கண்டிப்பு என்பனவற்றை அளவோடு கலந்து பக்குவமாக வளர்க்கப்படும் பிள்ளைதான் எதிர்காலத்தில் சிறந்த மனிதனாகத் திகழ்வான்!

குழந்தைகள் கற்றுக்கொடுப்பதைக்காட்டிலும் கற்றுக்கொள்வது அதிகம், அவர்களின் முதல் வழிகாட்டி, வாழும் உதாரணங்கள் அவன் பெற்றோர்களே! பொய் சொல்லாதே எனச்சொல்லிக்கொடுக்கும் பெற்றோர் பொய் சொல்வதும், அவ்ர்கள் முன் புகைப்பிடிப்பதும், சண்டை போடுவதும், தரங்கெட்ட படங்களை அவர்களை வைத்துக்கொண்டு ரசிப்பதும் எந்த வகையில் பிள்ளைகளை மேம்படுத்தும்? ஆகவே நல்ல பிள்ளைகளை உருவாக்க வேண்டிய பெற்றோர் முதலில் தாங்கள் முன்னுதாரணமாக‌ விளங்கவேண்டும்.

அதிகம் செல்லம் கொடுப்பது தவறு, அதைவிட தவறு அதிகம் கெடுபிடி காட்டி அவர்களை நோகச்செய்வது!, சீர்படுத்துகிறேன் பேர்வழி என்று பிள்ளைகளை அடித்து, துன்புறுத்தி படாதபாடு படுத்தினால் பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து விலகி வேறு துணை தேடவும் சேராத இடம்சேரவும் வழிவகுத்துவிடும்., பிள்ளைகளுக்கு பெற்றோரே முதல் தேவை எனும்படி நடந்து கொள்ள வேண்டும். தோழர்களாய் அவர்களை வழிநடத்தி தேவைப்படும் பொழுது அன்பையும் கண்டிப்பையும் காட்டி அவர்களை வளர்க்க‌ வேண்டும், கண்காணிக்கப்படுகிறோம் என்பதை உணர்த்தாமலேயே அவர்களை தேவையான காலம் வரை கண்காணிக்க வேண்டும். அவர்கள் தடம் மாறுவதை அறிய நேரிட்டால் முளையிலேயே கிள்ளி விட வேண்டும். பிறகென்ன நீங்கள்தான் உலகிலேயே சிறந்த பெற்றோர் என நான் மட்டுமல்ல உங்கள் பிள்ளைகளே ஒரு நாள் உங்களை பாராட்டுவார்கள்!

Friday, June 19, 2009

யார்?




அங்கே, அவள் பால்ய சினேகிதி நிஷா! குறும்புத்தனமாய் சிரித்துக்கொன்டே அவள் பக்கத்தில் வந்து அமர்ந்து கொன்டாள், ஆச்சர்யத்தில் கண்கள் அகல, "ஏய் நீ எப்போ ஊர்லேர்ந்து இங்க வந்த? என மீனா கேட்க, நான் இன்னைக்கு காலைல தான் இங்க வந்தேன்" இது நிக்ஷா, சரி எங்க தங்கியிருக்க எனக்கேட்க "எங்கயும் தங்காம இன்னைக்கு சாயந்திரமா திரும்பவும் கிளம்பிருவேன், என்றாள் நிக்ஷா!
என்ன விக்ஷயம்? சுற்றிப்பார்க்க வந்தாயா? மீனா கேட்டாள், அதற்கு நிக்ஷா "எல்லாம் உன்னை பார்க்கத்தான் வந்தேன்! நீதான் ஏற்கனவே நீ தங்கியிருக்கும் வீட்டுக்கு எப்படி வரவேண்டும் என்று சொல்லித்தந்திருக்கிறாயே" என்றாள் கண்களால் சிரித்துக்கொன்டே
நிக்ஷா, மீனாவைப்போலவே ஒரு நடுத்தரக்குடும்பத்திலிருந்து வந்தவளே, மீனாவோடு ஆரம்பப்பள்ளியில் படித்து, பின்னர் கணிணி கற்றுக்கொன்டுசொந்த ஊரிலேயே ஒரு அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தாள். நல்ல தோழி, அன்பானவள், நம்பிக்கையானவள், மீனா நிக்ஷாவை அவள் தங்கியிருக்கும் நாட்டிற்கு சுற்றிப்பார்க்க அடிக்கடி அழைப்பாள், அவளோ ஏதாவது ஒரு காரணம் சொல்லி தட்டிக்கழிப்பாள், இன்றோ எதிர்பாரா விதமாய் எதிரில் வந்து நிற்கிறாள்.
"ஏய் இன்னைக்கு என் அம்மா பிறந்த நாள், அர்ச்சனை செய்ய கோவிலுக்குப் போயிட்டிருக்கேன், கூட வரீயா", நிக்ஷா பேசவில்லை. மீனா இறங்கவேண்டிய நிறுத்தம் வந்ததும் கூடவே இறங்கிய நிக்ஷா, "நான் கோவிலுக்கு வரவில்லை, இங்கேயே காத்திருக்கேன், சீக்கிரம் போய் உன் பூஜையை முடித்துவிட்டு வா!" என்றாள், மீனாவுக்கு தோழியை தனியே விட்டுச்செல்வது சங்கடமாகத்தான் இருந்தது, அதிலும் ஊருக்குப் புதிது வேறு, என்ன செய்வது, வர மறுக்கிறாளே, மனதுள் கருவிக்கொன்டே கோவிலுக்குள் நுழைந்தாள்,
பிரார்த்தனை முடித்து வெளியே வந்து பார்த்தால் நிக்ஷாவை அங்கே காணவில்லை!
மீனாவுக்கு பகீரென்றது , அவள் தோழி நிக்ஷா! ஐயோ அவள் இந்த ஊருக்கு புதிதாச்சே, எங்கே போனாளோ, என்ன ஆனாளோ, மீனா அழுதேவிட்டாள்!
சட்டென்று, ஒரு யோசனை தோன்ற அவள் கைவசம் இருந்த நிக்ஷாவின் கைப்பேசி எண்ணை அழைத்தாள், தொலைபேசி அலறி ஓய்ந்தது, நிக்ஷா பதிலளிக்கவில்லை. அவள் வீட்டிற்கு நடந்ததை தெரிவித்துவிட்டு காவல் துறையில் புகார் செய்யலாம் என எண்ணிக்கொண்டே நிக்ஷாவின் வீட்டு எண்ணைத்தட்ட ஆரம்பிக்க, அவள் தொலைபேசி ஒரு அழைப்பில் அலறியது,ஹலோ, என்று அவள் குரல் கொடுக்க, மறுமுனையில், அவள் அம்மாவின் குரள் மிக மிக சோகமாக,
மீனா, உன் உயிர்தோழி நிக்ஷா, நேற்று இராத்திரி இங்கே ஒரு நெடுஞ்சாலை விபத்தில் இறந்துவிட்டாள்!!!!!! அடக்கடவுளே! அவள் தாய் மேலும் நடந்த விபத்தைப் பற்றி ஏதேதோ பேசிக்கொன்டே இருந்தார், மீனாவின் கண்கள் நிலைகுத்தி நிற்க, காதில் எதுவுமே விழவில்லை...அப்படியானால் அன்று அங்கே அவளோடு வந்தது யார்???????????????"
பி.கு : உண்மைச்சம்பவத்தை அடிப்படையாகக்கொன்ட கதை.






Wednesday, June 17, 2009

யார்?

காலை வேளை, தூக்கம் விழித்த சூரியன், துயில் மீண்ட‌ உலகை, தன் பொற்கரங்களால் பற்றிப் படர்ந்து தட்டி எழுப்பிக்கொன்டிருந்தான். பொன்னிற ஒளி வெள்ளத்தில் பனி படர்ந்த சாலையோரப்பூக்கள் மெல்ல மெல்ல இதழ்விரித்துச் சிரித்துக்கொன்டிருந்தன, மக்கள் அங்கும் இங்கும் நடமாடிக்கொன்டு அந்த பேருந்து நிலயத்தை ஆக்ரமித்தமித்த வண்ணமிருந்தனர். அங்காடிக்கடைகளும் அதை நிறைத்திருந்த மனிதர்களும்,அன்றும் ஒரு இயந்திர வாழ்வுக்கு தங்களை தயார்படுத்தியபடி ... அலைமோத‌.....

இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொள்ளாமல், பார்வையாளராக ஒரு ஓரம் அமர்ந்து போவோர் வருவோரை கவனித்தபடி, பேருந்துக்காக காத்துக்கொன்டிருந்த அவள் பெயர் மீனா. மேற்படிப்பைத்தொடர்வதற்காக‌ அவள் தன் தாய்நாடு விட்டு, பொருளாதாரத்திலும், கல்வித்தரத்திலும் மேற்கத்திய நாடுகளுக்கு ஈடான மதிப்பைப் பெற்றிருந்த அந்த நாட்டிற்குள் தஞ்சம் புகுந்திருந்தாள். அங்கேயே ஒரு நிறுவன‌த்தில் பொருப்பான ஒரு பதவியிலும் தன்னை இருத்திக்கொன்டாள். தொழில் செய்தவாரே, பகுதிநேரமாக படித்துக்கொன்டு அங்கே வாழ்ந்திருந்தாள் அவள்.

அன்றைய நாள் அவள் தாயின் பிறந்த நாள்!, அவள் தாயிருப்பதோ மலேசியாவில், அவளிருப்பதோ அந்த அண்டை நாட்டில், என்ன செய்வது? வருடா வருடம் வரும் தீபாவளி அன்றுதான் அவள் தன் குடும்பத்தினரை சந்திக்கும் வேளை வாய்க்கும், நினைத்தபடி ஓடிக்கண்டுவரும் நிலையில் அவள் இல்லையே, படிப்பையும், வேலையையும் விட்டு விட்டு நினைத்தபடி ஓடினால், சீட்டைக் கிழித்து ஊருக்கு மூட்டை கட்டி அனுப்பிவிடும் நாடு அது! ஒரு முறை பெயரைக் கெடுத்துக்கொன்டால், பின்னர் என்ன கரணம் போட்டாலும் அங்கு வேலை கிடைப்பது என்பது அரிதான செயலாகிவிடும், என்ன செய்வது? நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கை என்பதே இப்படித்தான், நினைத்ததை உடனே அடைய முடியாத நிலை!

அந்த நாள் ஒரு வெள்ளிக்கிழமை. அலுவலக வேலை 8.30 மணிக்கு மேலேயே துவங்கும். ஆகவே காலையில் முதல் வேளையாக தான் வேலைக்குச்செல்லும் வழியிலிருக்கும் அந்த அம்மன் ஆலயம் சென்று அம்மா பேரில் அர்ச்சனை செய்ய வேண்டும் என முதல் நாளே மனதிற்குள் முடிவுசெய்துகொன்டாள். அந்த வியாழன் இரவு 12 மணிக்கு தன் தாயை தொலைபேசியில் அழைத்து முதல் ஆளாக பிறந்த நாள் வாழ்த்துச்சொல்லி ஆனந்தப்பட்டுக்கொன்டாள்.

சொல்லி வைத்தாற்போல் சரியான நேரத்தில் அவள் பயணிக்கவேண்டிய பேருந்து அங்கிருந்த பயணிகளை தனக்குள் உள்வாங்கிக்கொன்டு பயணிக்கத்துவங்கியது. மீனா பேருந்தின் கடைசிப்பகுதியில் காலியாயிருந்த சன்னலோரமான ஒரு இருக்கையில் அமர்ந்துகொன்டாள். பேருந்தின் குளிர்சாதன வசதி, முதுகுத்த‌ண்டில் குளிர்ந்த நீரை ஊற்றியதைப்போல் நடுங்கச்செய்தது. சில வருடங்களாகவே பழகிப்போன விடயம்தான், எனவே தான் அணிந்திருந்த நீல சுரிதாரின் முந்தானையை முழுதாக இழுத்து போர்த்திய வண்ணம் தன் கவனத்தை வெளிகாட்சிகளில் செலுத்தத்துவங்கினாள் அவ‌ள்.

என்ன ஒரு அழகான நாடு, சுத்தத்திற்குத்தான் அங்கே முதலிடம், நமது நாட்டைப்போல‌, இயற்கை வளங்கள் கொழிக்கவில்லைதான், இருப்பினும் அந்நிய செலாவனி வந்து குவிகிறதே, செயற்கையான அழகுக்காட்சிகளுக்கு அங்கு பஞ்சமேயில்லை எனலாம், அங்குள்ள மக்களும் வீணே அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாதவர்கள்! யாரைப்பற்றியும் யாருக்கும் அக்கறை கிடையாது, இளசுகளுக்கு அவரவர் கையில் ஒரு கைப்பேசி, காதுகளை மறைத்திருக்கும் குட்டி வாக்மேனிலிருந்து வரும் இசை என அவரவர்க்கு ஒரு தனியுலகம் அங்கே! தானுண்டு தன் வேலையுண்டு எனும் கொள்கையில் மூவினமும் அங்கே முன்னேற்றப்பாதையில...

மீனாவின் கண்கள் வெளிக்காட்சிகளை நோட்டமிட்டவாறு பயணித்தாலும் அவள் மனம் மட்டும் அவள் வசம் இல்லை, அது தன் தாயை எண்ணி ஏங்கிக்கொன்டிருந்தது, எத்தனைப்பெரிய பெண்ணானாலும் உணவை அன்போடு ஊட்டிவிடுவது, அழகாக சேலை கட்டி விட்டு பார்த்து ரசிப்பது, மடியில் படுக்கவைத்து கேசம் வருடி விடுவது, அவர் மீது, வாசனைத்திரவியத்தின் உபயோகம் இல்லாமலேயே வீசும் மெல்லிய சந்தண வாடை என அனைத்தும் அவள் அன்னையின் அருகாமைக்காக் அவளை ஏங்கவைத்துக்கொன்டிருந்தன‌, எத்தனை சொந்தங்கள் வந்தாலுமே எத்தனை இன்பங்கள் தந்தாலுமே, அத்தனையும் ஒரு தாயாகுமா? எத்துனை பொருள் பொதிந்த வைரவரிகள், உண்மைதான், எண்ணங்கள் ஊற்றேடுத்து விழி நிறைத்து கண்ணம் இறங்கியது அருவியாய்.
பேருந்து ஆங்காங்கே நின்று பயனிகளை ஏற்றிக்கொண்டும், இறக்கிவிட்டுக்கொன்டும் பயணித்துக்கொன்டிருந்தது. இதோ இன்னும் சில தூரம் கடந்தால் அவள் இறங்க வேண்டிய அந்த ஆலயத்தை அடைந்துவிடலாம். லேசாக கண்களை மூடியவாறு தன் இருக்கையில் வசதியாக சாய்ந்து அமர்ந்துகொன்டாள், பேருந்தின் தாலாட்டில் பயணம் தொடர்கிறது.
திடீரென யாரோ தனை அழைப்பதைபோல உணர்ந்து அவள் கண்விழிக்க அங்கே...................
(தொடரும்)



கைகொடுக்கும் காப்புறுதிகள்


இப்பொழுதெல்லாம் நாம் தினசரி நாழிதழ்கள் வாசிக்கையில் அடிக்கடி நம் கண்களில் படும் செய்தி, "நோயுற்ற இன்னாருக்கு நன்கொடை தேவை" அல்லது "இவருடைய அறுவை சிகிச்சைக்கு உதவி தேவை "என்பதாக இருக்கும், கூடவே, வாட்டத்தோடு காட்சியளிக்கும் ஒரு நபர் அல்லது குடும்பம் அல்லது பார்க்கும்போதெ மனதை வருத்தும் ஒரு நோயுற்ற குழந்தையின் படம் இணைக்கப்பட்டிருக்கும். அவர்கள் பிரச்சனை கைமீறிப்போனதால் பொதுமக்கள் உதவியை எதிர்பார்த்திருப்பார்கள். இதில் தவறேதும் இல்லை.‌ நம் சமுதாயத்திற்கு நாம்தான் உதவ வேண்டும் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால். ஏன் நம்மவர்கள் இன்னும் இப்படி இன்னலிகளிலேயே உழல்கிறார்கள் என யோசித்தோமானால் நாம் உண‌ரக்கூடிய ஒரு செய்தி, "ந‌மது இனத்தின் அலட்சியம்" அல்லது முன்னெச்சரிக்கை இன்மை, ஆபத்துக்காலங்களுக்கு கைகொடுக்கும் முன்னேற்பாடுகளை கைவசம் கொண்டிருக்காத தன்மை எனக்கூறலாம்!
நம்மவர்களில் பெரும்பாலோர் சராசரி நடுத்தரவர்க்கத்தை சார்ந்தவர்களாகவே உள்ள‌னர். இவர்கள் தங்களது ஆபத்து அவசர காலங்களுக்கு உதவியாக காப்புறுதிகளை கைவசம் வைத்திருந்தால் அது அவர்கள் வாழ்வுக்கு எவ்வளவோ பாதுகாப்பாய் அமையும் என்று தோன்றுகிறது.
விபத்தும், ஆபத்தும் வாழ்வில் சொல்லிக்கொன்டு வருவதில்லை, "வரும் ஆனா வராது" என்று சினிமாவில் ஒரு தாத்தா நகைச்சுவை செய்வாரே, அதைப்போல "வராது ஆனால் சில சமயங்களில் வந்துவிடும்". வந்துவிட்டால் என்ன செய்வது? அதற்குத்தான் முன்னேற்பாடுகள் அவசியம் என்பது.

எனக்குத்தெரிந்த‌ ஒரு சம்பவத்தில் ஒரு பெரியவர் காலில் அடிபட்டு மருத்துவமனை சென்றார், ஒரு வாரம் மருத்துவமனையில் வைத்திருந்து, அவர் காலை காப்பாற்ற முடியாது எனக்கூறி காலைத்துண்டித்துவிட மருத்துவர்கள் முயன்றனர், அதில் ஒருவர் தமிழ் பெண் மருத்துவர்!?, படித்தவர்கள் யாரும் பக்கத்தில் இல்லாத சமயத்தில் அவரின் மனைவியை வற்புறுத்தி கையொப்ப வாங்க முயற்சித்தனர், ஆனால் அவர் மனைவி கொஞ்சம் விடயம் தெரிந்தவர் என்பதால் படித்த தனது பிள்ளைகளை வரவழைத்து அவர் கண‌வரை அங்கிருந்து வெளியேற்றி தனியார் மருத்துவமனையில் சேர்த்து அவரையும் அவர் காலையும் காப்பாற்றினார், செலவு 20,000 தைத்தாண்டியது. இந்த சம்பவம் வெளிநாட்டில் நடக்கவில்லை, நாம் வாழ்கிறோமே இதே நாட்டில்தான் நடந்தது. அவர் மட்டும் தனக்கென ஒரு காப்புறுதியை தன் கைவசம் வைத்திருந்தால் சிரமமின்றி ஒரு செலவுமின்றி அவர் உடனடியாக‌ தனியார் மருத்துவமனையில் சிறந்த வைத்தியம் பெற்று தேறியிருப்பார் அல்லவா?
இதுபோன்ற ஏகப்பட்ட சம்பவங்கள், ஆப‌த்தில் அவசர சிகிச்சை இன்றி உயிர்போன சம்பவங்கள், அலைகழிக்கப்பட்ட சிகிச்சைகள், அதனால் ஏற்பட்ட இழ‌ப்புகள் என நம்மில் பலருக்கு பாதிப்புக்கள் ஏற்படுகின்றன, இலவச மருத்துவம், பிறரிடம் நன்கொடை வாங்கி மருத்துவம் என இல்லாமல் முடிந்தவரை தங்கள் வசதிக்கேற்ப, தம‌க்கும், தம்மைச்சார்ந்தவர்களுக்கும் தகுதியான காப்புறுதிகளை வாங்கி வைத்துக்கொள்வதே அறிவான செயலாகும்.
இறுதியாக‌, காப்புறுதி முக‌வ‌ர்க‌ளுக்கு ஒரு விண்ண‌ப்ப‌ம், நீங்க‌ளும் ச‌முதாய‌த்திற்கு சேவை செய்ப‌வ‌ர்க‌ளே, ஆகையால், ஆதாயம் ஒன்றையே குறிக்கோளாக கொள்ளாமல், ம‌க்க‌ளுக்கு காப்புறுதி சம்பந்தமான‌‌ விள‌க்க‌ங்க‌ளும், அவர் தகுதிக்கேற்ற காப்புறுதி பரிந்துரைகளையும் நீங்கள் செய்திடல் வேண்டும், உங்கள் வருமானத்திற்காக சாதாரண மக்களை அவர்கள் வசதிக்கு மீறிய காப்புறுதிகளை வாங்கவைத்து பிறகு அவர்களால் அதை கட்டமுடியாமல் திண்டாட செய்துவிடாதீர்கள். நமது முன்னேற்பாடுகள் பல இடர்களில் இருந்து நம்மையும் நாம் நேசிப்பவர்களையும் காக்கட்டும்.

பி.கு : வாய்ப்பும் வசதிகளும் ஓரளவு வாய்க்கப்பெற்றவர்களுக்காகவே இந்த விடயம் இங்கே பதிவிடப்பட்டுள்ளது, மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்க்கும், பெரிய அளவில் மருத்துவ செலவை எதிர் நோக்கியவர்களுக்கும் இந்த பதிவு அமைக்கப்படவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

Tuesday, June 16, 2009

கண்ணதாசன் சிந்தனைகள் II



தண்ணீரில்லாமல் போவது நதியின் தவறல்ல‌,
காய்ந்து போவ‌து காடு செய்த‌ பிழைய‌ன்று,
க‌ட‌லில் திமிங்கில‌ங்க‌ள் இருப்ப‌து க‌ட‌லின் பிழைய‌ன்று,
ஒன்றுக்காக‌ ஒன்றை கோபித்துக்கொண்டால்
நிம்ம‌தியை இழ‌ப்ப‌துதான் மிஞ்சும்!


எது ந‌ட‌க்க‌க்கூடாது என்ப‌த‌ற்காக‌ நீ கோப‌ப்ப‌டுகிறாயோ,
நீ கோப‌ப்ப‌ட்டு நிதான‌மிழ‌ந்த‌ ஒரே கார‌ண‌த்திற்காக‌
அது ந‌ட‌ந்தே விடுகிற‌து!

கோப‌ம் முத‌ற்க‌ட்ட‌த்தில் வென்ற‌து போல‌த்தெரிந்தால்
நிர‌ந்த‌ர‌மாகத்தோல்வி அடைய‌ப்போகிற‌து என்று பொருள்!
எதையும் சாதிக்க‌ விரும்புப‌வ‌னுக்கு
நிதான‌ம் தான் சிற‌ந்த‌ ஆயுத‌ம்!



Sunday, June 14, 2009

கல்வியும் கடவுளும்


"இரை தேடு, இறையும் தேடு" என்பது சான்றோர் வாக்கு. அந்த முதல் "இரை"யை கெள‌ர‌வ‌மான‌ முறையில் தேட‌ க‌ல்வி என்ப‌து மிக‌ மிக‌ இன்ற்ய‌மையாத‌தாகிற‌து. ‌ இந்த நவநாகரீக கணிணி யுகத்தில், தொழில் என்றால் உடலுழைப்பை விட‌ அறிவுக்கும், திறமைக்குமே முன்னுரிமை அதிகம் வழங்கப்படுகின்றது. ஒரு மனிதன் நல்வாழ்வு வாழ, அவன் திறமைசாலி என்று ஆதாரத்தோடு நிரூபிக்க அவனுக்கு கல்வியறிவு சான்றிதழ் இன்றியமையாததாகிறது! படிக்காத மேதைகள் சிலர் பூமியில் வெற்றிக்கொடி நாட்டி இருப்பினும், புத்திசாலி எனும் பெருமை படித்தவர்களுக்கு வழங்கப்படுவது யாவ‌ரும் அறிந்ததே.


கல்வியில் சிறந்த சமுதாயம் பொருளாதாரத்திலும் வாழ்கைத்தரத்திலும் சிறப்பான முன்னேற்றத்தையே பதிவு செய்கிற‌‌து. அவ்வகையில் நாம் முன்னேற, நமது சந்ததியினர் எதிர்காலத்தில் மேன்மையான வாழ்க்கை நிலையை ஏற்படுத்திக்கொள்ள இன்றைய அடித்தளமாக அமைவது ஆரம்பக்கல்வியே. அப்படியெனில், அதை வழங்கக்கூடிய நமது கல்விக்கூடங்கள் நிச்சயம் தரமானதாகவும், சிறந்த அடிப்படை வசதிகளை கொன்டதாகவும் இருக்க வேண்டியது மிக மிக அவசியம் அல்லவா. ஆனால் அன்மையில் நான் கண்ணுற்ற கீழ்க்காணும் படங்களின் ஒப்பீடுகள், மனதை மிகவும் வெதனையடையச்செய்வதாக அமைந்துள்ளது. இதோ அவை உங்கள் பார்வைக்காக, இவை உண்மை இல்லை என்றால் தயவு செய்து மறுப்பு தெரிவியுங்கள்,

உலு செபெத்தாங், தைப்பிங்கில் அமைந்த ஐயனார் ஆலயம்




அதே தைப்பிங் மாவட்ட‌த்தில் அமைந்த வசதி குறைந்த கம்போங் லாமா ஜெபோங் லாமா ஆரம்பத்தமிழ்ப்பள்ளி!




போர்ட் கிளாங்கில் அமைந்த சிறீ பால சுப்ரமணியர் ஆலயம்



அதே கிளாங்கில் அமைந்த தெப்பி சுங்கை ஆரம்பத்தமிழ் பள்ளியின் நிலை




சிரம்பானில் அமைந்துள்ள சிறீ பாலதண்டாயுதபாணி ஆலயம்




அதே நெகிரி செம்பிலானில் விளையாட்டு மைதானமோ, சிற்றுண்டிச்சாலையோ, அல்லது நூலகமோ இல்லாது கடை வரிசையில் அமையப்பெற்ற லுக்குட் சுங்கை சாலாக் தோட்ட ஆரம்பத்தமிழ் பள்ளி


எழில் மேவும் மாரான் ம‌ர‌த்தாண்ட‌வ‌ர் ஆல‌ய‌ம்



அதே அளவு முக்கியத்துவம் வழங்கியதாகத்தெரியாத மாரான் மரத்தாண்டவர் ஆரம்பத்தமிழ் பள்ளி

அக வாழ்வுக்கு "இறை" முக்கியம் தான் ஆனால் இன்றைய வாழ்வில் இக வாழ்வுக்கு கல்வியே மிக மிக முக்கியம். எனவே நமது கவனத்தை தயவு செய்து நமது கல்விக்கூடங்கள் பக்கமும் செலுத்துவோம். இன்று நமது சமுதாயத்தில் புறையோடிப்போயிருக்கும் களங்கங்களை வேரோடு களைவதற்கு நமது முயற்சியை முன்வைப்போம், நமது சந்ததி நல்வாழ்வு வாழ வகைசெய்வோம்.







Saturday, June 13, 2009

தமிழினமும் தற்கொலையும்


இந்த நவநாகரீக உலகில் மனிதன் எவ்வளவோ முன்னேறியுள்ளான், அவன் வாழ்வை மேம்படுத்த எத்தனை எத்தனை கண்டுபிடிப்புகள், ஆனால் அவை அத்தனையும் புற வாழ்வை மேம்படுத்திய அளவு அக வாழ்வை மேம்படுத்தவில்லை என்பதனை அருகி வரும் மனித நேயங்களும் பெருகி வரும் மனித சீரழிவுகளும் உறுதிபடுத்துகின்றன.


தனிமனித சீரழிவு என்று வரும்பொழுது அதில் முக்கிய பங்கு வகிப்பது தற்கொலையே. அன்மைய ஆய்வின்படி 39 மணித்துளிக்கு ஒருவர் வீதம் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகின்றது. மேலும் 10 முதல் 20 மில்லியன் பேர் தற்கொலை முயற்சியிலிருந்து ஆண்டுதோறும் தப்புவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

ஏன் இந்த நிலை? குறிப்பாக நம்மவர்கள் ஏன் இவ்விடயத்தில் முன்னனியில் இருக்கின்றார்கள்? சஞ்சிக்கூலிகளாக அத்துவானக்காடுகளில் அநாதைகளாக அடைக்கப்பட்டு வறுத்தெடுக்கப்பட்ட போதிலும் நம் முன்னோர்கள் சோர்ந்து போய் தற்கொலையை நாடவில்லையே, வாழ்ந்து வழித்தோண்றல்களாக‌ விட்டுச்சென்றுள்ளனரே நம்மை , இப்பொழுது மட்டும் புதிதாக எங்கிருந்து வந்தது இந்த கோழைத்தனம்? வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாது தவறான முடிவை நாடும் அறிவிலித்தனம்.
மறுத்தாலும் மறைக்க முடியாத ஒரு உண்மை, நம்மில் பெரும்பாலோர்க்கு எளிதில் உணர்ச்சிவயப்படும் குணம் அமைந்துள்ளது. பள்ளிப்பரீட்சையில், காதலில், மேலும் வாழ்வில் முக்கியமானதாகக் கருதும் விடயங்களில் ஏற்படும் தோல்வி, எளிதில் ஒருவரை தற்கொலைப்பாதைக்கு இட்டுச்செல்கிறது.
பள்ளியில் படிக்கும் மாணாக்கர்களுக்கு பெற்றோர் சிறந்த வழிகாட்டியாகவும், முன்னுதாரணமாகவும் திகழவேண்டும். பிள்ளைகளை ஆடு மாடுகளைப்போல் மிரட்டி வளர்ப்பதும், தன்னிச்சைப்படி அவர்களை ஆட்டிப்படைப்பதும், அளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகளை அவர்கள் பால் செலுத்துவதும், பிள்ளைகளை எளிதில் மனமுடையச்செய்கிறது. அன்பில்லாத பெற்றோர் பிள்ளைகளுக்கு வாய்த்த சாபம், எனவே தோழமையோடு கண்கானித்து வளர்க்கப்படும் பிள்ளைகள் நிச்சயம் இதுபோன்ற முடிவுகளை தேட மாட்டார்கள். சாய்ந்து அழ தோளிருந்தால் மலையே சாய்ந்தாலும் மனித மனம் வீழாது, இதை அனைவரும் உணர வேண்டும்.

அடுத்தது காதல்தோல்வி , இது நமது சமுதாயத்தின் மற்றொரு புண். காதலிப்பவர்கள் தங்களை மட்டுமே கவனத்தில் கொண்டு, தங்களின் இயல்பு வாழ்க்கையை மறக்கின்றனர், இறுதியில் ஏமாற்றமே மிஞ்சும் எனும் நிலை வரும் பொழுது தற்கொலையை எளிதில் நாடி விடுகின்றனர். உயிரைக்கொடுத்து காதலை வாழவைக்கிறார்களாம்??? காதல் என்ன இவர்கள் குடும்ப சொத்தா வாழவைக்க? எல்லாம் சினிமா படுத்தும் பாடு! காதல் புனிதமானது ஆனால் காதலிப்பவர்கள் எல்லோரும் தேவதைகளல்ல! சராசரி மனிதர்கள், இதை முதலில் இவர்கள் உணர வேண்டும். வாழ்க்கையை வெல்ல வேண்டும் காதல் தோல்வியை வாழ்க்கைத்தோல்வி என நினைத்து தற்கொலையை நாடி வீணடித்துவிடக்கூடாது! அது விவேகமல்ல! பிறந்த மண்ணுக்கும் பெற்ற தாய்க்கும் எந்த நல்லதை செய்யாவிட்டாலும், அந்த தாயை நோகடித்து சாவை நாடி பூமிக்கு பாரமாய் அமைந்து விடக்கூடாது.

இறுதியாக ஏழ்மை, சில காலங்களுக்கு முன், ஒரு அழகிய இளம் தாய் தன் குழந்தைகளோடு இரயில் தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொன்டார்.
விசாரித்தால் ஏழ்மையாம்! ஏனிந்த நிலை, நமது சமுதாயம் இவர்களுக்கு அரணாக விளங்கியிருந்தால், ஒரு வேளை அந்தத்தாயும் அவர் குழந்தைகளும் காப்பாற்றப்பட்டிருக்கலாம் அல்லவா? நம் நாட்டில் ஒரு முஸ்லீம் நண்பருக்கு பிரச்சனை என்றால் அவர் தொழும் மசூதியில் அவருக்கான உதவியை அவரால் பெற முடியும், ஒரு கிருஸ்த்துவ நண்பருக்கு உதவி தேவை என்றால் அவர் தேவாலயத்தில் நிச்சயம் அவருக்கு உதவி கிடைக்கும், ஆனால் நம் நிலை? நம்மிடம் வசூல் செய்யப்பட்டு இயங்கும் ஆல‌யங்களில் இதுபோன்ற உதவிகள் உள்ளனவா? இருந்தால், தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே!

இறுதியாக‌ த‌ற்கொலையை தவறு என்று நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. இதோ வாழ்க்கையை வாழ்ந்து முடித்த வாழ்க்கைக்கவிஞர்
கண்ணதாசன் சோகத்தில் என்ன கூறுகிறார் என்று கேளுங்கள்,

"ஆண்டவா எனக்கு என்ன துன்பம் வரட்டும், எவ்வள‌வு துயரங்கள் வரட்டும், உனக்காக தாங்கிக்கொள்வேன். இந்த பூமியிலே பிறந்தாகி விட்டது, வாழ்ந்தாக வேண்டும், தற்கொலை செய்துகொள்ள நான் தயாராக இல்லை. மரணம் என்ற ஒன்றை அனுப்பி என்னை நீ எடுத்துக்கொள்கிற வரையில், இங்கு வாழ்வது என்று முடிவு கட்டிவிட்டேன், இந்த வாழ்க்கைச்சாலையில் எது வந்தாலும், எது குறுக்கிட்டாலும் கூட நான் கவலையில்லாமல் உன் சந்நிதியிலேயே நிற்பேன், வாழுவேன், எனக்காக யார் வாழ்கிறார்களோ அவர்களைக்காப்பாற்றுவேன், யாருக்காக நான் வாழ வேண்டுமோ அவர்களுக்காக நான் வாழுவேன்!"

வர்ண ஜாலம்


அதிகாலை மஞ்சள் நிறம், அந்தி வானின் சிவந்த நிறம், கடலலையின் நீல நிற‌ம், கவிக்குயிலின் கருமை நிறம், பசுஞ்சோலையின் பச்சை நிறம், படர்ந்த மேகங்களின் வெண்மை நிறம், இவை அத்தனையும் தன்னகத்தே கொன்ட வானவில்லின் வர்ணஜாலம் என இவ்வுலகில் வர்ணங்களின் அரசாட்சி அளவில்லாதது, அற்புதமானது

இத்தகைய சிறப்பு வாய்ந்த வர்ணங்களின் பயன்பாடுகள் மனித வாழ்வில், உடலையும் மனதையும் சேர்த்து பாதிக்கின்றன, ஆதலால் ஆதி காலந்தொட்டே நோய்களை குணமாக்க வர்ணங்களை உபயோகிக்கும் வர்ண சிகிச்சை முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வர்ணங்களையும் அதன் குணாதிசயங்கள் மற்றும் பயன்பாடுகளை காண்போம்.

வர்ணங்களின் பயன்க‌ள்

சிவ‌ப்பு
கவர்ச்சியை தருவதோடு, சுபீட்சத்தையும் அளிக்கிறது. உடம்பில் ஏற்படும் வலிகளை போக்கக்கூடியது. தோல் நோய்க‌ளை குண‌மாக்க‌ வ‌ல்ல‌து.
பாசம் தொடர்பானது.


ஆரஞ்சு
நீரால் ஏற்படும் நோய்களுக்கு நல்லது

மஞ்ச‌ள்
சீர‌ன‌ ச‌க்தியை த‌ருகிற‌து
உள்ளுறுப்புக்க‌ளுக்குச் ச‌க்தியை அளிக்கிற‌து.

பச்சை
பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடியது.
இரக்க குணம் ஏற்படும்.குளிர்ச்சியைத் தரக்கூடியது.
நுரையீரல் சம்பந்தப்பட்ட‌ அனைத்து நோயையும் குணமாக்க வலலது.

நீல‌ம் (வெளீர் நீல‌ம்)
க‌ற்ப‌னைத்திற‌னை அதி‌க‌ரிக்க‌க்கூடிய‌து.
குடும்ப‌த்தில் ம‌கிழ்ச்சியை ஏற்ப‌டுத்த‌க்கூடிய‌து.
ந‌ர‌ம்பு ம‌ன்ட‌ல‌த்திற்கு ச‌க்தி கொடுக்க‌க்கூடிய‌து.

கருநீல‌ம்
த‌லைமைத்துவ‌ம் த‌ர‌க்கூடிய‌து.
அதீத‌ ஆற்ற‌லை அளிக்க‌க்கூடிய‌து.
சூட்சும‌ உட‌லுக்கு ந‌ன்மை த‌ர‌க்கூடிய‌து.

செங்கருநீல‌ம்
பிர‌ப‌ஞ்ச‌ தொட‌ர்பை ஏற்ப‌டுத்த‌க்கூடிய‌து.
பொது ஆரோக்கிய‌த்திற்கு உகந்த‌து.
சுரப்பிகள் அனைத்தையும் தட்டி எழுப்பக்கூடியது.

வர்ண மூச்சுப் ப‌யிற்சி

நீண்ட‌ வ‌ர்ண‌ மூச்சை மூக்கின் வ‌ழியே உள்ளூக்கிழுத்து, உட‌னே நீண்ட‌ வ‌ர்ண‌ மூச்சை மூக்கின் வ‌ழியே வெளிவிட‌வும். இதைப்போலவே வ‌ர்ண‌த்தை மூச்சாக‌ உள்ளூக்கிழுத்து அதே வ‌ர்ண‌த்தை வெளியிட‌ வேண்டும். இவ்வாறு செய்வ‌த‌ன் மூல‌ம் வ‌ர்ண‌ங்க‌ளின் முழுப்ப‌ல‌னையும் பெற்று சிற‌ப்பாக‌ வாழ‌ முடியும்.

மூச்சுப்ப‌யிற்சிக்கு ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும் வ‌ர்ண‌ங்க‌ளும் அத‌ன் ப‌லன்‌க‌ளும்

சிவ‌ப்பு ‍- காந்த‌ ச‌க்தி, உட‌‌ல் வ‌லிமை, ந‌ர‌ம்பு ம‌ண்ட‌ல‌த்திற்கு ப‌ல‌ம‌ளிக்கும், உள்ளாற்ற‌ல் பெருகும்.

ஆர‌ஞ்சு - ம‌ன‌ அமைதி, இர‌க்க‌ம், க‌வ‌ர்ச்சி

ம‌ஞ்ச‌ள் - உக்ஷ்ண‌ம், சீர‌ண‌ ச‌க்தி, உள்ளூண‌ர்வு, வர்த்தகர்களுக்கு பொறுத்தமானது

ப‌ச்சை - குளிர்ச்சி, ஞாப‌க‌ ச‌க்தி, டெலிப‌தி ச‌க்தி, ம‌ன‌ வ‌லிமை

நீல‌ம் - உள்ளாற்ற‌ல் நோய் எதிர்ப்பு ச‌க்தி, ம‌ன‌ அமைதி, முதுமையைத் த‌டுத்த‌ல்

கருநீலம் - தலைமைத்துவம், பிரபஞ்ச தொடர்பு, மூளையின் சக்தி
ஞான பாதை, தெய்வீக காட்சிகள், தீர்வு, மனசாந்தி

வெள்ளை - ஒளி ‍ பூர‌ண‌த்துவ‌ம், இறைச‌க்தி, ஜீவ‌ ச‌க்தி

கிழமைகளுக்குரிய நிறங்கள்


அந்தந்த கிழமைகளில் அதற்குரிய வர்ண உபயோகங்கள் சாதகமான பலன்களை அளிக்கக்கூடும்.



ஞாயிறு - இளஞ்சிவப்பு , செம்பு
திங்கள் - வெண்மை, வெளீர் நீலம்
செவ்வாய் - சிவப்பு
புதன் - பச்சை
வியாழன் - மஞ்சள்
வெள்ளி - வெண்மை
சனி - கருப்பு, சாம்பல் நிறம்

Thursday, June 11, 2009

ஆறு


சில காலங்களுக்கு முன்பு, வெறிச்சோடிய ஒரு தோட்டம், தோட்டத்துப்பாட்டாளிகள் பலர் அந்த தோட்டத்தை கைவிட்டு வேறிடம் புலம் பெயர்ந்து சென்றுவிட்டனர். கரும்பலகையின் பச்சை நிறம் தாங்கிய கேட்பார் அற்ற லயம் எனப்படும் வரிசை வீடுகள். வில்லேந்திய இராமர் கோவில் ஒன்றும் அரசமரத்து முனியும் அங்கே எஞ்சியுள்ள மககளுக்கு காவலாய்! அந்த தோட்டத்திற்கு அருகாமையில் மிகப்பெரிய ஆறு, நீர்ப்புழக்கத்திற்கும் சரி , மீன் பிடிக்கும் மக்கள் வயிற்றுப்பாட்டுக்கும் சரி என்றுமே அந்த ஆறு ஒரு காமதேனு!

நீண்டு நெளிந்த அந்த ஆற்றின் இருகரைகளிலும் திட்டுத்திட்டாய் பலகை வீடுகள், அதில் இன்னும் அங்கே வாழும் நமது மக்கள்! அது பொன்றதொரு வீட்டில்தான் அவள் குடியிருந்தாள், அவளோடு அவள் தந்தை, தாய், தம்பி, தங்கை என ஐவர் கொன்ட அழகான குடும்பம்.

அமுதா, அதுதான் அவள் பெயர், சிவந்து மெலிந்து உயர்ந்த தேகம், அடர்ந்த கூந்தல் இருவகிடெடுத்து பின்னப்பட்ட சடைகள், பெரிய கண்களோடு சின்னச் சின்ன மூக்கும் வாயும். அவள் அந்த தோட்டத்திற்கு அருகாமையிலிருந்த தமிழ்ப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தாள்

அவளுக்குப் பிடித்தது இயற்கையும், தமிழ் புத்தகங்களும், அவள் தாயும் தந்தையும் தமிழறிவு பெற்றவர்களாதலால் அவள் வீட்டில் நிறைய தமிழ் புத்தகங்கள். பள்ளி விட்டு வீடு சேர்ந்தபின், விறுவுறுவென்று உணவை முடித்து விட்டு ஏதாவதொரு நாவலை தூக்கிக்கொண்டு வீட்டின் முன்பிருந்த அந்த ஆற்றுப்பாலத்தின் மேல் அமர்ந்து கொள்வாள். தாழ்வான அந்தப்பாலத்தில் கால்கள் தொடும் தூரத்தில் நீரோட்டம், சமயங்களில் தாழ்வாகவும், சில நேரங்களில் பாலத்தை தொடும் அளவிலும் ஓடிக்கொன்டிருக்கும்.

நன்பகல் கடந்த மாலை, இளஞ்சூடோடு கூடிய அந்தி வெயில், மெல்லிய தென்றல், தூரத்திலே வானுயர்ந்த காட்டு மரங்கள்! மிகவும் ரம்யமானதொரு சூழல். லேசான இருள் கவியும் வரை அவள் அந்த இடம் விட்டு நகர மாட்டாள். கால்கள் நீரை அலைந்து கொன்டிருக்க, கண்கள் புத்தகத்தை மேய்ந்து கொன்டிருக்கும்.

அன்றும் அவ்வாறே, அவள் அமர்ந்து படித்துக்கொன்டிருக்கையில், அவளுடைய இளைய சகோதரன் இரண்டு வயதிருக்கும், கொழு கொழுவென எழுமிச்சை நிறத்தில், திராட்சைக்கண்கள் கொன்டவன், மெல்ல தவழ்ந்து வெளியே வந்தான். அவனைக்கண்டவுடன் அவள் ஓடிச்சென்று அவனை தூக்கிக்கொன்டாள், மெல்ல நடந்து வந்து பழைய படி அந்த ஆற்றின் மேல் அமர்ந்து அவனை மடியில் அமர்த்திக்கொன்டாள். அவள் தாய் உள்ளே வேலையாய் இருந்ததனால் இதை அவர் கவனிக்கவில்லை.

நேரம் கடந்து கொன்டிருந்தது, நீரோட்டம் மெல்ல மெல்ல அதிகரித்து வேகம் கூடிக்கொன்டிருந்தது, அவள் அதைக் உணர‌வில்லை. திடீரென அவள் சகோதரன் திமிரவே அவள் பிடி விலகி, நிதானிப்பதற்குள் நழுவினான் ஆற்றுக்குள், எட்டிப்பாய்ந்து அவனுடைய ஒரு காலை பற்றிக்கொன்டு, மறுகையால் பாலத்தின் பலகை ஒன்றை இறுக்கமாக பிடித்துக்கொன்டாள். ஆற்று வெள்ளத்தின் வேகத்திற்கும், அவள் சகோதரனின் கனத்திற்கும் அவளால் ஈடு கொடுக்க முடியவில்லை, மல்லுக்கட்டி பிடித்துக்கொன்டு, அபயக்குரல் எழுப்பினாள், அலறியடித்துக்கொன்டு ஓடி வந்த அவள் தாய் அந்த ஆற்றில் குதித்து அவள் சகோதரனைக் காப்பாற்றினார், அதற்குள் இவளும் தான் ப‌ற்றியிருந்த பலகையைப்பிடித்து மேலேறி விட்டாள்.

அவள் தாயின் கோபம் எல்லை மீறியது, ஆத்திரத்தில் கண்கள் அனலைக்கக்க "தொலைந்தாய் நீ" என்று கத்தியபடி அவளை அடிக்க கை ஓங்கினார், தாயின் அடியிலிருந்து லாவகமாக விலகியவள், விருட்டென்று ஒடி தள்ளி நின்று கொன்டாள், அவள் தாய் அவளை எரிப்பதைப்போல் முறைத்துவிட்டு "வீட்டிற்குள் வராதே என்று திட்டியபடி, அவள் தம்பியைத் தூக்கிக்கொன்டு வீட்டிற்குள் விரைந்தார்.உள்ளே போனவர் சிறிது நேரத்தில் அவர் தாயோடு கூடிக்கொண்டு, ஆற்றில் தம்பி விழுந்ததற்கு பரிகாரம் செய்தார், ஒரு தட்டில் நான்கு நிறத்தில் சோற்று உருண்டைகள் குங்குமம் கலந்த சோற்று உருண்டை , கரி கலந்த சோற்று உருண்டை , மஞ்சள் கலந்த சோற்றுருண்டை , மற்றும் வெறும் சாதம் என நான்கு நிற உருண்டைகளை நான்கு திசைகளிலும் எறிந்தார். அவன் அணிந்திருந்த ஆடையைக்கொன்டுவந்து ஆற்றில் வீசியெறிந்தார். தன் பங்குக்கு ஆற்றுக்கு ஓரமாய் நின்று இந்த கூத்தையெல்லாம் சிரித்தபடி வேடிக்கை பார்த்துக்கொன்டிருந்த அவளை அவர் பாட்டியும் திட்டிவிட்டு தன் மகளோடு வீட்டிற்குள் சென்று விட்டார்!.

அந்தி சாய்ந்தது, வேலைக்குச் சென்ற அவள் தந்தை வீடு திரும்பினார், வீட்டிற்குள் நுழைந்த சிறிது நேரத்தில் அவள் வீடே அதிரும்படி அவர் அவளை அழைத்தார், இல்லை இல்லை கர்ஜித்தார், அழுதுகொன்டே தலைகுனிந்து குற்றவாளியாய் தந்தை முன் அவள், மரண தண்டனைக்கைதி கூட அந்த அளவு நொந்திருப்பானா என்று தெரியவில்லை! கண்களில் அருவியென பெருக்கெடுத்தது கண்ணீர். அவள் தந்தை அவளை அடிக்கவில்லை, இனிமேல் அங்கே போவியா? தந்தை முடிக்கவேயில்லை, அவள் முடிவெடுத்து விட்டாள், தனக்குள்ளேயே அந்த ஆற்றுக்கு ஒரு விடைகொடுத்தாள்.

அந்த‌ இர‌வு, மனதில் அந்த நிகழ்வு மறுபடி மறுபடி ஒளிபரப்பாகிக்கொன்டிருந்தது, உற‌க்க‌ம் அறவே வர மறுத்தது, வலுக்கட்டாயமாக க‌ண்க‌ளை மூடினாள், ச‌ல‌சல‌த்து ஓடும் அந்த‌ ஆறு அவ‌ள் க‌ண்முன் ப‌ட‌ர்ந்து விரிந்த‌து, நெடு நேரத்திற்குப் மெல்ல‌ மெல்ல அந்த ஆற்றின் ஓசை அவ‌ளைத்தாலாட்ட‌ க‌ண்க‌ள் க‌ன‌வுல‌க‌த்திற்கு சிற‌கு விரிக்க‌ நித்திரை அவ‌ளை உள்வாங்கிக்கொன்டது

பி.கு : ஏற்கனவே மன்னன் இதழில் எழுதியவை, சில மாற்றங்களோடு!

Wednesday, June 10, 2009

கண்ணதாசன் சிந்தனைகள் 1


காலங்களே தருகின்றன, அவையே பறிக்கின்றன, காலங்களே சிரிக்கச் செய்கின்றன, அவையே அழவும் வைக்கின்றன, கால‌ம் பார்த்துக்காரிய‌ம் செய்தால்,பூமியையே விலைக்கு வாங்க‌லாம், கால‌ங்க‌ளிலேயே காரிய‌ங்க‌ளின், வெற்றி தோல்விக‌ள் அட‌ங்கி இருக்கின்ற‌ன‌!



ஆறு என்ற ஒன்று, ஆண்டவனால் படைக்கப்படவில்லை!அது ஆறாக உருக்கொன்டு, இரண்டு கரைகளையும் ஏற்படுத்திக்கொன்டது,மனிதருக்கு இல்லாத புத்தி, தண்ணீருக்கு இருக்கிறது!

கோடை வ‌ர‌லாம், வ‌சந்தம் வ‌ர‌லாம், ப‌னிக்கால‌ங்க‌ள் வ‌ர‌லாம் ப‌ருவ‌ங்க‌ள் மாறுமே த‌விர‌, உல‌க‌த்தினுடைய‌ உருவ‌ம் மாறினாலும் கூட‌, உன்னுடைய‌ நிலை மாறாது, ம‌ன‌தை ம‌ட்டும் உன்னால் அட‌க்க‌ முடியுமானால்.

தற்காப்புக்கலையும் தமிழ்ப்பெண்கள் நிலையும்!

இந்த ந‌வீன‌ யுக‌த்தில் ஒரு பெண் அதிலும் தமிழ்ப்பெண் த‌னிமனித வாழ்வில் எதிர்கொள்ளும் பிர‌ச்ச‌னைக‌ளை எழுத்தில் வ‌டித்து முடித்து விட‌ முடியாது, உலகம் முன்னேற்றமடைந்து வருகின்ற போதிலும் வாழ்வில் ந‌ம் பெண்க‌ளுக்கு துன்ப‌ங்க‌ளும், ஆப‌த்துக்க‌ளும் மேலும் மேலும் அதிகரித்த வண்ணமாக‌வே உள்ள‌ன. நாள்தோறும் நாளிதழ்களில் வெளியிடப்படும் செய்திகளில் அவர்களிடத்தில் மேற்கொள்ளப்பட்ட கொலை, கொள்ளை மற்றும் தாக்குதல்கள் இவற்றை மெய்ப்பிக்கின்றன.

இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை பாட்டுக்கும், பரதத்துக்கும் அனுப்புவதற்கு காட்டும் ஆர்வத்தை விட சிறுவ‌ய‌து முத‌லே அவ‌ர்க‌ள் பிள்ளைக‌ள் த‌ற்காப்புக்கலையில் தேர்ச்சி பெற ஆர்வம் காட்டினால் சிறப்பாக இருக்குமே என்று தோன்றுகிறது!

த‌ற்காப்புக்க‌லை த‌ன்ன‌ம்பிக்கையோடு, உட‌ல் வ‌லிமையையும், முன்யோச‌னையையும் அளிக்கிற‌து என்றால் அது மிகையாகாது. தன்னை தற்காத்துக்கொள்ளும் திறமையற்ற பெண்ணுடைய க‌ற்பிற்கும், உயிருக்கும், உட‌மைக‌ளுக்கும் இந்த உலகில் உத்திர‌வாத‌ம் இல்லை! இது ப‌ய‌முறுத்துவ‌த‌ற்காக‌ கூற‌ப்ப‌ட்ட‌து என‌ த‌ய‌வுசெய்து எண்ண‌வேண்டாம்.

இதெல்லாம் உண்மையில்லை, நாங்க‌ள் எங்க‌ள் பெண்பிள்ளைக‌ளை க‌ண்ணின் க‌ரும‌ணிபோல் பாதுகாத்து வ‌ள‌ர்ப்போம், ஆப‌த்து என்ற‌ பேச்சுக்கே இட‌மில்லை என்று கூறும் பெற்றோர்க‌ளே! த‌ய‌வு செய்து கேளுங்க‌ள்!
எத்த‌னை கால‌ம் நீங்க‌ள் உங்க‌ள் பெண்க‌ளுக்கு பாதுகாப்பாக‌ இருக்க‌ முடியும், அப்ப‌டியே இருந்தாலும், உங்க‌ள் வாழ்க்கை முடிந்த‌பின் அவ‌ள் நிலை? திரும‌ண‌ம் செய்திருந்தாலும் விதிவ‌ச‌த்தால் அவ‌ள் த‌னிமையாக்க‌ப்ப‌ட்டாள் அவ‌ள் நிலை? த‌ய‌வு செய்து யோசியுங்க‌ள் பெற்றோர்க‌ளே!

பள்ளிக்கூடங்களில் த‌ற்பொழுது தற்காப்புக்கலைகள் குறைந்த கட்டணத்தில் கற்றுத்தரப்படுகின்றன. ஆனால் கல்வியமைச்சு புறப்பாடத்திட்டத்தில் இந்த தற்காப்புக்கலையையும் ஒரு பாடமாக்கும் முறையை அறிமுகப்படுத்தினால் அது எல்லா வகையிலும் பயனளிப்பதாய் அமையும்.

உங்க‌ள் குழந்தைக‌ளை த‌ற்காப்புக்க‌லையில் ஈடுப‌டுத்துவ‌த‌ன் மூல‌ம், பெற்றோர்களாகிய‌ நீங்க‌ள் அவ‌ர்க‌ளுக்கும் அவ‌ர்க‌ளின் எதிர்கால‌த்திற்கும் மிக‌ப்பெரிய‌ ந‌ன்மையை செய்கிறீர்க‌ள் என்ப‌தை உண‌ருங்க‌ள்!

Monday, June 8, 2009

இயற்கையும் மனிதனும்!

ஆதிமனிதன் இயற்கையோடு இயற்கையாய் இணைந்து வாழ்ந்தான், அவனுக்கு வீடில்லை, வாசலில்லை, பணமில்லை அதனால் வாழ்வில் பயமுமில்லை! இயற்கையின் சோதனைகளை நேருக்கு நேர் எதிர்கொன்டான், அந்த இயற்கையை பஞ்சபூதங்களென பகுத்து வைத்து தனது ஐம்புலன்க‌ளின் துணைகொண்டு அவற்றோடு இணைந்து வாழ்ந்து வாழ்வை வெற்றிகொள்ள கற்றுக்கொண்டான்!
அவ்வகையில், அவன் தன் வாழ்வில் துணை நின்ற இயற்கையை தெய்வமாய் வழிபடத்துவங்கினான், ஆகாய வெளியை ஆகாச வாணியென்றும் , புவியை பூமாதேவியென்றும், நீரை கங்காதேவி என்றும் நெருப்பை அக்கினிபகவான் மற்றும் காற்றை வாயுபகவான் என்றும் வகைப்படுத்தி, பஞ்ச பூதங்களை அவன் வழிபடத்துவங்கினான்! இந்தக் குறியீடுகள் இனத்துக்கு இனம் மாறுபடுகின்றன‌ (அடியேன் தமிழோடு இருப்பதால் என் சிற்றறிவுக்கு எட்டிய தமிழ் வார்த்தைகளால் இங்கே வகைப்படுத்தியிருக்கிறேன்).
கால ஓட்டத்தில் அவன் மேன்மையடைவதாய் எண்ணிக்கொண்டு பல மதங்களைப்படைத்து இயற்கையை புறக்கணித்தான், விளைவு, ஆதிமனிதன் வாழ்க்கைகூட நம்மளவு இழிவுற்றதாய் அமைந்திருக்காது என்றே இன்றைய வாழ்க்கையை எண்ணத்தோன்றுகிறது! போர், பேரிடர், வறுமை, வறட்சி என பூமியே அழிவை நோக்கி சென்று கொன்டிருக்கிறது, இந்த லட்சணத்தில் பூமியை நாறடித்தது போதாது என்று பிரபஞ்சத்தின் வேறு கிரகங்களிலும் ஆராய்ச்சி நடக்கிறதாம் குடியேறுவதற்கு!? அதுவும் வெற்றி பெற்றால் சொல்லவே வேண்டாம், மனிதர்கள் என்ன லேசுபட்டவர்களா? ஓசோனிலேயே ஓட்டை போட்டவர்களாயிற்றே நாம்! பிறகு இப்பொழுது நாடுகளுக்குள் நடக்கும் போராட்டங்களை நாளை இன்ன பிற கிரகங்களிலும் நிதம் எதிர்பார்க்கலாம். சரி ந‌ம் விடயத்திற்கு வருவோம், இத்தகைய மேன்மைமிகு இயற்கையுடன் இணந்து வாழ நமது முன்னோர்கள் பண்டைய விஞ்ஞானங்களில் ஒன்றான வாஸ்து சாஸ்திரத்தில் பல குறிப்புகளை விட்டுச்சென்றுள்ளனர். மிகவும் எளிமையான சில விதிமுறைகளை கடைபிடிப்பதன் வழி அமைதியான, நன்மைகள் சூழ்ந்த நல் வாழ்வை நாம் அமைத்துக்கொள்ள இயலும், அவற்றில் சில துளிகள் உங்கள் பார்வைக்காகவும், பிரயோகத்திற்காகவும் :‍


பஞ்சபூதங்களுக்கும் ஐம்புலன்களுக்கும் உள்ள‌ உறவுகள் சீர்ப‌ட‌ ப‌ரிந்துரைக்க‌ப்ப‌டும் ச‌ம‌நிலைப்ப‌யிற்சிக‌ள்,







ஆகாயம் - செவிமடுத்தல்
மென்மையான இசையை செவிம‌டுப்ப‌து,
அதிக‌மான‌ ஒலியை த‌விர்ப்ப‌து,







காற்று - நுகர்தல்
வாசனை ஊதுப‌த்திக‌ளின் உப‌யோக‌ம்
வாசனைத்திரவியங்களின் உபயோகம்






நெருப்பு - பார்வை
எரியும் மெழுகுவ‌ர்த்தி ஒளியை உற்று நோக்குதல்
அதிகாலை சூரிய‌ வெளிச்ச‌த்தை காணுதல்






நீர் - ‍சுவை
ஒரு பாத்திரத்தில் நீர் வார்த்து அதில் ம‌ல‌ர்க‌ளை மித‌க்க‌ விடுதல்






பூமி - தொடுதல்
பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் உறுதி செய்து கொன்டு கால‌ணி இன்றி புல் த‌ரையில் கால் பதியுங்கள்

இனிய நண்பர்களே, இயற்கையை மதித்து இயற்கையோடு இணைந்து வாழ்ந்து நன்மையடைவோம்.

Saturday, June 6, 2009

குழந்தைச்செல்வம்





செல்வங்களில் சிறந்த செல்வம் குழந்தைச்செல்வம். மணமான தம்பதியரை புலன் விசாரணை செய்யும் சில பெரிசுகள், ஏதாவது புழு பூச்சி உண்டா என வினவுவார்கள், இவர்கள் ஏன் நேரடியாக குழந்தை உண்டா என கேட்காமல் இப்படி சுற்றி வளைக்கிறார்கள் என்றால் அதற்கு வேறு அர்த்தங்கள் உண்டாம்.


அதாவது பூச்சி என்றால் பெண் குழந்தையாம்! கொஞ்ச நாள் பிறந்த வீட்டில் ஆட்டம் போட்டுவிட்டு திருமணமானதும் புகுந்த வீட்டுக்கு பறந்து விடுவாளாம்.


புழு என்றால் ஆண் குழந்தையாம்! க‌டைசிவ‌ரை அப்பா அம்மாவை குடைந்து கொன்டே இருப்பானாம்!

சூரியனை சுட்டுவிட்டார்களாமே?

Friday, June 5, 2009
உலகம் முழுவதும் தமிழர்கள் இருக்கிறார்கள், ஆனால் எல்லா இடங்களிலும் அவர்கள் வாழ்வதில்லை, அவ்வகையில் இலங்கையில் மூண்ட பெரும் இனக்கலவரங்கள் இலங்கைத்தமிழர்களை வாட்டி வதைத்தன‌, துன்புறுத்தி அழித்த‌ன‌. த‌மிழர்களுக்கு எதிரான சிங்கள வெறியர்களின் அராஜகங்கள், இலங்கைத்தமிழர்களுக்காக‌ போராட ஒரு மாவீரனை உருவாக்கியது, தன் இனங்காக்க, தன் இனப்பெண்களின் கற்பைக்காக்க புயலென எழுந்த சிம்மசொப்பனமே "மாவீரன் பிரபாகரன்".
அவரை பலர் பலவிதமாக விமர்சித்தாலும் மாவீரன் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் போராட்டம் தனிமனித சுயநலத்திற்காகவே, தன் சொந்த குடும்ப நலனுக்காகவோ, முன்னெடுக்கப்பட்டதல்ல! தான் சார்ந்த இனத்தைக்காக்க, தமிழனின் மானங்காக்க! அவ்வகையில் பொது நலனுக்காக தமது வாழ்வையும் குடும்பத்தையும் அர்ப்பணித்த அந்த மாமனிதர் என்றென்றும் நமது வணக்கத்திற்குறியவரே!அண்மை‌யில் இலங்கை‌யில் வெடித்த‌ மாபெரும் உள்நாட்டுப்போரில் அந்த‌ மாவீர‌னை அழித்துவிட்ட‌தாக அந்நிய நாடுகளின் கைகோர்த்து, இந்தியாவும், சீனாவும் உதவிட ப‌ல‌ போர்க்குற்ற‌ங்க‌ளைப்புரிந்த இலங்கை அரசாங்கம் ப‌ல‌ வ‌த‌ந்திக‌ளை உல‌வ‌விட்ட‌து, எனினும் விடுத‌லைப்புலிக‌ளின் இய‌க்க‌மே அவ‌ர் மறைந்து விட்டாரென‌ கீழ்க‌ண்ட‌ அறிக்கையை வெளியிட்டு உல‌க‌த்த‌மிழ‌ர்க‌ளை உறைய‌ வைத்துவிட்ட‌து!
தமிழீழத் தேசியத் தலைவருக்கு வீரவணக்கங்கள்

தமிழ் மக்க்களின் அணையா விடுதலைச் சுடர்தமிழீழ மக்களின் விடுதலைக்காகவும், செழுமையான எதிர்காலத்திற்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்து போராடிய தமிழீழ தேசியத் தலைவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரும் தலைமைத் தளபதியுமாகிய மேதகு வே.பிரபாகரன் அவர்கள் சிங்கள ஆதிக்கப்படைகளுடனான போரில் வீரச்சாவினை தழுவியுள்ளார் என்பதை அனைத்துதமிழீழ மக்களுக்கும், தமிழக மக்களுக்கும், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் தாங்கொண்ணா துயருடன் அறியத்தருகின்றோம்.
கடந்த 37 வருடங்களாக தமிழீழ மண்ணில் பொங்கிப் பிரவாகித்த விடுதலை வரலாற்றின் ஆன்மாகவும் குறியீடாகவும் விளங்கியவர் எமது தேசியத்தலைவர். ஒரு கால்நூற்றாண்டுக்கு மேலாக அடக்குமுறைக்கு முகம்கொடுத்து நின்ற ஒரு தேசிய இனத்தின் வரலாற்றையே மாற்றுகின்ற விருப்போடும் துணிவோடும் நம்பிக்கையோடும் எதிரிக்கெதிரான விட்டுக்கொடுப்பற்ற ஒரு பெரும் விடுதலைப் போரை தலைமையேற்று நடத்தியவர் அவர். கற்பனைககு எட்டாத தற்தியாகமும், கட்டுப்பாடும், வீரமும், ஒழுக்கமும் நிறைந்த, உன்னதமான ஒரு விடுதலை இயக்கத்தைக் கட்டியெழுப்பி, பெரும் படையணிகளோடும் ஒரு தனித்த தேசத்திற்குரிய நிர்வாகக் கட்டமைப்புகளோடும் கனரக ஆயுத வல்லமைகளோடும் போராட்டத்தை வழிநடத்தினார்.
அரசியற் போராட்டத்திற்கு இணையாக சமூக மாற்றத்திற்கான போராட்டங்களையும் முன்னெடுத்தார். போராட்டக் களங்களில் எமது மகளிர் நிகழ்த்திக் காட்டிய சாதனைகளுக்கு களம் அமைத்துக் கொடுத்ததன் மூலம் எமது சமூகத்தில் பெண்களுக்கிருந்த தனித்துவமான பங்களிப்பை வெளிக்காட்டியவர் அவர்.
புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மீதும், தமிழக மக்கள மீதும், உலகம் முழுவதும் பரந்து வாழும் உறவுகள் மீதும் அவர் கொண்டிருந்த பற்று மிகவும் ஆழமானது. தமிழர் போராட்ட வரலாறு நெருக்கடிகளை எதிர்நோக்கி, மீளமுடியாத கட்டத்தை எதிர்கொண்ட காலங்களில் அவற்றையெல்லாம் துணிச்சலோடு எதிர்கொண்டு விடுதலையை அடுத்த கட்டத்திற்கு வேகமாக நகர்த்தியவர் எமது தேசியத் தலைவர்.
தலைவரின் போராட்ட அனுபவமும், தற்துணிவும், வீரமுமே எவ்வித நெருக்கடிகளையும் எதிர்கொள்ளும் உந்து சக்தியாக, எமது போராட்ட சக்கரத்தின் அச்சாணியாக இருந்திருக்கிறது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் முறிந்து, சர்வதேச சக்திகளின் துணையுடன் ஒரு பெரும் யுத்தம் மீண்டும் எம்மீது திணிக்கப்பட்ட போது, தலைவர் அவர்கள் அதனைத்துணிவுடனேயே எதிர்கொண்டார்.
போர் நெருக்கடியான கட்டங்களை எட்டி எமது நிலப்பரப்புகள் எதிரியால் சுற்றி வளைக்கப்பட்டு ஒரு பெரும் யுத்தம் எம்மக்கள் மீது ஏவிவிடப்பட்டபோதும் தலைவர், தான் வாழ்ந்த மக்களுடனேயே நின்றார். மக்களதும் தளபதிகளினதும் தொடர்ச்சியான வேண்டுகோள்களையும் மீறி அவலப்படும் மக்களை விட்டு வெளியேற மறுத்தார். எமது மக்கள் எதிர்கொண்ட அத்தனை வலிகளையும் தானும் சுமந்தார். இறுதியில், விடுதலைக்கான இந்த நீண்டபாதையில், எந்த மக்களுக்காக ஆயுதமேந்தினாரோ அம்மக்களுடனேயே கடைசி மணித்துளிவரை நின்று போராடி வீரச்சாவடைந்தார். ’எம் மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுங்கள்’ என்பதே அவரது இறுதிக் வேண்டுகோளாக இருந்திருக்கிறது.வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளிவீசிக் கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிககும் எல்லோர் மனங்களிலும் அவர்என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.
எமது தேசியத் தலைவரினது வீரவணக்க நிகழ்வை அதற்குரிய எழுச்சியுடன் மேற்கொள்ளுமாறு அனைவரையும் வேண்டுகிறோம். திங்கட்கிழமை 25.05.2009 முதல் ஒரு வாரத்திற்கு எமது தலைவரை நினைவு கொள்ளும் வீரவணக்க வாரமாக எமது இயக்கம் பிரகடனப்படுத்துகிறது.
தலைவரது இலட்சிய நெருப்பை எம் மனங்களில் ஏந்தி அவர் கடைசிவரை போராடிய எமது மக்களின் விடுதலையை வென்றெடுக்க உழைப்பதே அவருக்கான உண்மையான மரியாதையாகும். எமது தலைவரின் வீரச்சாவையிட்டு தம்மையோ ஏனையோரையோ வருத்திக் கொள்ளும் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாமென அனைத்து தமிழ் மக்களையும் பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.
எமது தேசியத் தலைவரோடு வீரச்சாவைத் தழுவிய அனைத்து தளபதிகளுக்கும் மாவீரர்களுக்கும் மக்களுக்கும் எமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். இம் மாவீரர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்பதை அறியத் தருகிறோம்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்செல்வராசா பத்மநாதன்அனைத்துலக வெளியுறவுச் செயலகம்தமிழீழ விடுதலைப்புலிகள்.

சிறைவிட்டு வந்தது சிங்கம்


Friday, June 5, 2009
கமுண்டின் தடுப்புக்காவல் மையத்திலிருந்து எவ்வித நிபந்தனைக்களுக்கும் உட்படாமல் உண்மையான சுதந்திரப் பறவையாக வெளிவந்த இண்ட்ராப் தலைவர் உதயகுமார் அவர் எந்த ஊரில் காலடி வைக்கக்கூடாது என்று கூறப்பட்டதோ, அந்த ஊருக்கு, சிறம்பானுக்கு, ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் வீர வரவேற்பு வழங்க, நேற்றிரவு ராசாவிலுள்ள தன்னுடைய தாயாரின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.
47 வயதான வழக்குரைஞர் உதயகுமார் நிபந்தனைகளுடனான விடுதலைப் பத்திரத்தில் கையொப்பமிட மறுத்து விட்டார். “எந்தக் குற்றமும் புரியாத நான் ஏன் நிபந்தனைப் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும்?”, என்ற அவரின் கேள்விக்கு பதில் அளிக்க இயலாத தடுப்புக்காவல் மைய அதிகாரிகள் சனியன் போய்த் தொலைந்தால் போதும் என்ற எண்ணத்தில் அவரை குண்டுக்கட்டாக தூக்கி எறிந்து வெளியேற்றினர்.
உதயகுமாரை யார் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். பொதுவாழ்க்கையில் ஈடுபட்டவர் யாராக இருந்தாலும், அவர் ஆண்டவனாக இருந்தாலும் கூட, விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்லர். ஆனால், தன்னைத் தொடர்ந்து குற்றவாளியாக காட்டும், தன்னுடைய உரிமைகளைப் பறிக்கும் நிபந்தனைப் பத்திரத்தில் கையொப்பமிட மறுத்துவிட்ட உதயகுமார் கமுண்டிங் தடுப்புக்காவல் மையத்தின் வரலாற்றில் கையொப்பமிட்டு விடுதலை பெற்ற இதர கைதிகளிலிருந்து வேறுபட்டிருக்கிறார். இது உதயகுமாருக்கு அவருடைய தன்மானத்தில், உரிமையில் இருக்கும் திண்மையை காட்டுகிறது.
அவருக்கு விதிக்கப்படவிருந்த நிபந்தனைகளில் ஒன்று அவர் சிறம்பானில் காலடி எடுத்து வைக்கக்கூடாது என்பதாகும்.கமுண்டிங்கிலிருந்து வருகிற வழியில் பல இடங்களில், அவற்றில் ரவாங், சுங்கை பூலோ மற்றும் லாபு டோல் சாவடியும் அடங்கும், அவருக்காக காத்திருந்த ஆதரவாளர்களைச் சந்தித்து பேசினார்.இரவு மணி 9.15 க்கு அவர் லாபு டோல் சாவடி வந்து சேர்ந்தார். அங்கு மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்திருந்த அவருடைய ஆதரவாளர்கள் பெரும் வரவேற்பு நல்கினர்.பின்னர், 18 மாதங்களுக்குப் பிறகு ராசாவில் அவர் தன்னுடைய தாயாருடன் சேர்ந்து கொண்டார்.