நவநாகரீக யுகம், விஞ்ஞானத்தின் விளிம்பு நிலை வாழ்க்கைத்தரம் கணினியுகப் புரட்சிகள், பணத்தின் ஆளுமையில் முழுதாக தங்களைப் பறிகொடுத்து வாழும் மனித வாழ்வு. தனிமனித வாழ்வே இவற்றோடு தகிடு தத்தம் ஆடிக்கொன்டிருக்கும் நிலையில் குடும்பம், பெற்றேடுத்த பெற்றோர், பெற்று விட்ட குழந்தைகள் எனத்தொடரும் உறவுகள்!
குழந்தையாய் பிறக்கிறோம், பெற்றோர் தயவில் வளர்ந்து, படித்து, பிறகு வேலை, திருமணம், பிள்ளை குட்டிகள், அவர்களது எதிர்காலம் எனத்தொடங்கி 20 தொடங்கி 60 வரை கடமையே கண்ணாக வாழ்ந்து ஒரு வழியாக முடிந்தளவு வாழ்வோடு போராடி கடைசியாக "பிரச்சனைகளெல்லாம் முடிந்துவிட்டதடா சாமி"! என முதுமையில் எல்லோராலும் நிம்மதியாக பெருமூச்சு விடமுடிகிறதா? பலருக்கு அங்கேதானே பிரச்சனையே ஆரம்பமாகின்றது!
குழந்தையாய் பிறக்கிறோம், பெற்றோர் தயவில் வளர்ந்து, படித்து, பிறகு வேலை, திருமணம், பிள்ளை குட்டிகள், அவர்களது எதிர்காலம் எனத்தொடங்கி 20 தொடங்கி 60 வரை கடமையே கண்ணாக வாழ்ந்து ஒரு வழியாக முடிந்தளவு வாழ்வோடு போராடி கடைசியாக "பிரச்சனைகளெல்லாம் முடிந்துவிட்டதடா சாமி"! என முதுமையில் எல்லோராலும் நிம்மதியாக பெருமூச்சு விடமுடிகிறதா? பலருக்கு அங்கேதானே பிரச்சனையே ஆரம்பமாகின்றது!
இன்று நாம் காணும் முதியோர்களில் சில ரகம் உண்டு. பலர் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு தங்கள் குடும்பத்தோடு ஐக்கியமாகி இறுதிவரை குடும்பத்தோடு வாழந்து கண்மூடுபவர்கள். தங்களைச் சார்ந்தவர்களால் நல்முறையில் நடத்தப்படும் இவர்கள் பாக்கியசாலிகள். ஆனால் சில முதியோர் சாறு பிழிந்தபின் தூக்கியெறியப்படும் சக்கையைப்போல் அவர்களின் உழைப்பு, கையிருப்பு என அனைத்தும் தீர்ந்தபின் அல்லது சுரண்டப்பட்ட பின் தங்கள் மக்கள் எனும் மாக்களாலேயே வீதியில் வீசியெறியப்பட்டவர்கள். இவை இரண்டிலும் சேராத மற்றொரு ரகம் உண்டு. அது திருமணம் இன்றி தனிமை வாழ்க்கைக்கு ஆட்பட்ட முதியோர், இவர்களில் சிலர் தமது சொந்த பந்தங்களோடு ஒட்டிக்கொன்டு இறுதிகாலத்தை ஓட்டுவர், ஏனைய பிறர் நிலை? தனிமை வாழ்வுதான்!
இன்றைய வாழ்க்கையில், பணம் படைத்தோரே எல்லா வகையிலும் சிறப்பாக வாழ முடிவதைக் காண முடிகிறது. பணம் படைத்த முதியோர் தங்கள் இறுதிக்காலத்தை ஒரளவு சுமூகமாக கழித்துவிடக்கூடிய வாய்ப்பு உள்ளது. பணம் படைத்தவரை யார்தான் வெறுப்பார்? எல்லோரும் ஒட்டிக்கொன்டு உறவாடுவார்கள். சொல்வதைக்கேட்டு சேவகம் புரிவார்கள்! நோயுற்றால் மேன்மையான மருத்துவம், வீட்டிலேயே தாதியை வைத்து தேவைகளை நிறைவேற்றும் நிலை. இல்லாவிட்டால் கூட விலையுயர்ந்த காப்பகங்களில் தங்குவது என இறுதிக்காலத்தை வசதியாக எதிர்கொள்ளலாம், ஆனால் வாய்க்கும் கைக்குமாக வாழ்ந்த சராசரி முதியோர்கள் நிலை?
நடுத்தர வர்க்கத்துப் முதியோர்களில் பலர் தங்களது இறுதிக்காலத்தை மனதில் கொள்ளாது தங்களது சேமதிதிப்பணத்தை வீடு வாங்கவும், தங்களது பிள்ளைகளின் மேற்படிப்புக்காகவும் செலவிட்டு விடுகின்றனர். தங்கள் பிள்ளைகள் அதிலும் போற்றி போற்றி வளர்த்த தங்கள் ஆண் பிள்ளைகள் தங்களை என்றும் கைவிட மாட்டார்கள் எனும் அசாத்திய நம்பிக்கை. ஆனால் நட்ட விதை எல்லாமா நல்ல பலன் தந்து விடுகிறது? சிலர் நன்றி மறந்து, மனிதாபிமானம் இழந்து நடுத்தெருவில் விட்டு விடுகிறார்களே தங்கள் பெற்றோர்களை! வாய்ப்புக் கிடைத்தால் முதியோர் இல்லங்களுக்குச் சென்று அவர்களோடு பேசினால் தெரியவரும் பல கல்நெஞ்சக்கார பிள்ளைகளால் விளைந்த கண்ணீர் கதைகள். சினிமாவையே மிஞ்சிவிடும் சுருங்கிய முகத்தோடும், வருந்திய மனதோடும் அவர்கள் சொல்கின்ற வாழ்க்கைச் சுய சரிதைகள்!
முந்தைய காலங்களில் இருந்ததைப்போல கூட்டுக்குடும்ப வாழ்க்கைகள் தற்பொழுது மிகமிக குறைவே. வளர்ந்துவிட்ட பிள்ளைகளை வீட்டைவிட்டு வெளியேற்றி விட்டு அவரவர் கையை ஊன்றி அவரவர் பிழைத்துக்கொள்ள வேண்டும் என்பது மேற்கத்திய நாடுகளின் பரவலான வாழ்க்கை முறை. அங்கே யாரும் யாரையும் சார்ந்து வாழ்வது மிகவும் குறைவு அல்லது அரிது!. நமது பிள்ளைகள் மட்டுமென்ன ? புத்திசாலிகளாயிற்றே விட்டு விடுவார்களா இதுபோன்ற வாழ்க்கையை? நல்ல நிலை வாய்த்துவிட்டால் தாங்களும் தனித்து வாழ வேண்டும் எனும் எண்ணம் பலருக்கு ஏற்பட்டு விடுகிறது, இதில் பெரும் பங்கு வீட்டுக்கு வாய்த்த மருமக்களின் உபயம். (கவனிக்க நான் எல்லோரையும் சொல்லவில்லை, பல நல்ல பிள்ளகள் நாடு முழுதும் இருக்கிறார்கள், நான் இங்கே குறிப்பிடுவது முதியோர் இல்லத்தில் வாடுபவர்களின் பிள்ளைகளை) .
பிள்ளைகள் எப்போழுதோ விழித்துக்கொன்டார்கள், அப்படியானால் முதியோர்களும் சுதாரித்துக் கொள்ள வேண்டாமோ? தங்களது இறுதிக்காலத்தை மனதில் கொன்டு சில முன்னேற்பாடுகளை சிரமம் பாராது செய்து கொள்ள வேண்டும், கையிருப்பை கண்மூடித்தனமாக செலவிடக்கூடாது, ஓரளவுக்கு பிள்ளைகளை படிக்க வைத்து பிறகு அவர்கள் சுய முயற்சியில் முன்னேற வழிகாட்ட வேண்டும். முதுமைகால சேமிப்புத்திட்டங்கள் பல வங்கிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது, முடிந்தவரை யாரையும் எதிர்பார்க்காமல் சிறிதேனும் சேமியுங்கள். உடலில் வழுவிருந்தால் வயதானாலும் உங்களுக்கேற்ற தொழிலை செய்வதற்குத் தயங்காதீர்கள் (யாருடைய கட்டாயத்தின் பேரிலும் இல்லாமல் உங்களது சுய விருப்பத்தின் பேரில்). உடல் நலத்தைப் பேணுங்கள், இறை வழிபாட்டில் சிந்தனையை செலுத்துங்கள். இவற்றையெல்லாம் விட மிக மிக ஆரோக்கியமாய் விளங்குகிறீகளா, உங்கள் கவனத்தை சமுதாயத்தின் பால் திருப்புங்கள், உங்களது அன்பும் பராமரிப்பும் இந்த சமுதாயத்திற்கு என்றென்றும் தேவை என்பதை உணர்ந்து பல நல்ல இயக்கங்களில் இணைந்து செயல் படுங்கள் .
முதியோர்களே நம்புங்கள், நீங்கள் அற்புதமானவர்கள், வாழப்பிறந்த எல்லா உயிர்களுக்கும் முதுமையை இறைவன் பரிசளிப்பதில்லை, சிலர் வாழ்வில் முதுமை வரும் முன்னரே வாழ்வு முடிந்து விடுகிறது! புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் அற்புதமானவர்கள், வாழ்வை ஆண்டு முடித்த அநுபவசாலிகள். ஒரு அப்துல் கலாம், ஒரு வாஜ்பாயி என மண்ணில் ஆளப் பிறந்தவர்கள். முன்னேற்பாடுகளோடு உங்கள் இல்லங்களையும் உள்ளங்களையும் மகிழ்ச்சியால் நிரப்பிக்கொள்ளுங்கள். முடிந்தால் உங்கள் காலம் முடியும் வரை விழுது விட்ட ஆலமரமாய் உங்கள் தயவில் பல இளம் உயிர்கள் (பேரக்குழந்தைகள்) இளைப்பார வகை செய்யுங்கள், தயவு செய்து உங்கள் பிள்ளைகளை மட்டுமே நம்பி முதியோர் இல்லங்களை நிரப்பாதீர்கள்...
பி.கு : இந்தப் பதிவு முதியோராகிவிட்ட நமது பெறோர்களுக்கு மட்டுமல்ல, நாளை அந்தப் பதவியை அடையப்போகும் நமக்கும் சேர்த்துத்தான் :-)
No comments:
Post a Comment