.

.
.

Thursday, June 25, 2009

பந்தம்



"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்". உண்மை அன்பு உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளிப்படுவது, போலித்தன்மை அற்றது, பிரதி பலனை எதிர்பார்க்காதது. எந்த சந்தர்பத்திலும் பழிவாங்காதது! தனக்கு வேண்டியவரை தண்டிக்காதது! இதோ அப்படிப்பட்ட‌ அன்பை பிரதிபலிக்கும் ஒரு சம்பவம்...
பலதரப்பட்ட மக்கள் வாழும் ஆரவாரமிக்க பெரிய நகரம், அங்கே வகை வகையாய் வீடுகள், வாழ்க்கை வசதிகள் மற்றும் உல்லாச வசதிகள். பல விதமான வாழ்க்கைத்தரங்களை கொன்ட மனிதர்கள். அவர்களில் சிலர் மாட மாளிகைகளையும், அடுக்குமாடி வீடுகளையும் கொன்டிருந்தனர்.அதில் ஒரு இளஞ்சிவப்பு அடுக்குமாடி வீடு ஒன்று! அதில் ஒரு அழகான குட்டி குடும்பம், அம்மா அப்பாவோடு மூன்றரை வயது முகிழன்! நமது கதையின் கதாநாயகன்.
அந்த குடும்பத்தலைவன் தன் இளமைகாலத்தை மிகவும் சிறப்பாக செயல்படுத்தி நல்ல கல்வி, உத்தியோகம், வச்தியான வாழ்க்கை என குடும்பத்தை வழிநடத்தி வந்தான், அவன் மனைவியும் நன்கு படித்தவள், எனினும் வீட்டிலிருந்து குடும்பத்தையும், குழந்தையையும் பராமரித்து வந்தாள். ஒரளவு பெசும் திறமை பெற்ற முகிழனுக்கு அவன் தாய் பாலர் பள்ளி பாடல்களை அனுதினமும் கற்றுக்கொடுத்து வந்தாள். அவனும் தன் மழலைக்குரலில் தனக்குத் தோன்றிய வகையில் அப்பாடல்களைபாடி தன் பெற்றோரை மகிழ்ச்சியில் ஆழ்த்துவான்
இத்தகைய இனிய சூழலில் முகிழனின் தாய் மீண்டும் தாய்மையடைந்தாள். அவ்ளும் அவள் கணவனும் ஆண‌ந்ததில் ஆழ்ந்தனர், எற்கனவே ஒரு ஆண் வாரிசு இருப்ப‌தால், அடுத்து பிறக்கப்போவது பெண்ணாக இருக்க வேண்டுமென இறைவனை வேண்டிக்கொண்டனர். முகிழனுக்கும் அவனுக்குத் துணையாக ஒரு குட்டி பாப்பா வரப்போவதை தெரிய‌வைத்து மகிழ்ந்தனர்.
தாயின் அருகாமை இருந்தாலும் தன் கூட ஒடிப்பிடித்து விளையாடவும், பாடல் பாடி மகிழவும் விரைவிலேயே வேறோரு பாப்பா வரப்போவது அவன் மனதில் ஆணந்தத்தை விதைத்திருக்கவேண்டும். அவனும் தன் இளவலை எதிர்நோக்கிக் காத்திருக்கத்தொடங்கினான்
நாட்கள் நகரத்துவங்கின, முகிழனின் தாய் தாய்மையின் மாற்றங்களை அடைந்துகொன்டிருந்தாள். இந்நிலையில் முகிழனுக்கு அவன் பாப்பாவிற்கான பாடல் ஒன்றைக் கற்றுக்கொடுத்தாள். அன்றிலிருந்து அவனும் தினம் ஒரு முறையாவது தன் தாயிடம் அந்தப் பாடலை பாடிக்காட்டுவான், அவன் தாயின் கூற்றுப்படி தன் தம்பியோ, தங்கையோ தன் பாடலை கேட்கிறார் எனும் நம்பிக்கையோடு.....
எதிர்பார்த்த நாளும் விரைந்து வந்தது, முகிழன் தாய் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டாள். பல மனி நேரம் துன்புற்று, அறுவை சிகிச்சையின் வழி ஒரு பெண் மகவு பிறந்தது. அதன்பிறகு தான் சோதனையே ஆரம்பமானது!, அந்த சிசுவை பறிசோதித்த மருத்துவர் அந்தக்குழந்தையின் உள்ளுருப்புக்கள் மிகவும் பலவீனமடைந்திருப்பதாகவும், அதிக பட்சம் ஒரு வாரம் வரை கூட அக்குழந்தை தாக்குப்பிடித்து உயிர்வாழ்வது கடினம் எனவும் தெரிவித்தனர். முகிழன் குடும்பம் மொத்தமாய் நொருங்கிப்போனது! இதயம் கனக்க, வேதனை எல்லை மீறி விழிகள் கண்ணீரை சொரிந்தன, என்ன செய்வது? இதுதான் வாழ்க்கை, எல்லாமே இயல்பாய், சிறப்பாய் நடந்து வரும் போது எங்காவது ஒரு மூலையிலிருந்து ஒரு இடி வரும், புயல் வரும், மின்னலுடன் கூடிய மழை வரும் அதுவரை திரும்பிப் பாராமலேயே முன்னோக்கி மட்டுமே ஓடிக்கொன்டிருந்த வாழ்க்கையிலிருந்து ஒரு நொடி நிறுத்திவைத்து திகைக்க வைக்கும்!

ஓரிரு நாட்கள் கடந்தன. குழந்தை தீவிர கண்காணிப்பு பிரிவில்! சின்ன அதன் உடலில் குழாய்கள் பொருத்தி மருந்து வகையறாக்கள் உட்செழுத்தப்பட்டுக் கொன்டிருந்தன! முகிழன் தாய் ஓரளவு தேறி வீட்டுக்கு அனுப்பப்பட்டாள்! ஆனால் குழந்தை மருத்துவமனையிலேயே தொடர்ந்து தங்க வைக்கப்பட்டது.
தன் தாய் த‌ன் சகோதரன் அல்லது சகோதரியோடு வருவாள் என எதிர்பார்த்து ஏமார்ந்த முகிழன் தன் தாயை நச்சரிக்கத்துவங்கினான், என்ன சொல்லியும் கேளாமல் அவன் தொல்லை எல்லை மீறலானது.
பொறுத்துப் பொறுத்து பார்த்த தாய், உன் தங்கை மருத்துவமனியில் உள்ளால் நீ கூடிய விரைவில் அவளை சென்று காணலாம் என ஆசை வார்த்தைகளால் அடக்கப்பார்த்தாள், அவன் அடங்கினால் தானே? உடனே தன் தங்கையைச் சென்று காண வேண்டுமென்றும் அவளுக்கான தன் பாடலை அவளிடத்தில் பாட வேண்டுமெனவும் கெஞ்சத்துவங்கினான், எற்கனவே மன உளைச்சல், உடல் நோவு, இதில் இவன் வேறு! என்னதான் செய்வது, கணவனும், மனைவியுமாய் யோசித்தார்கள், ஆமாம் புதிதாய் பிறந்த அந்த பிஞ்சு இன்னும் சில நாட்களில் காலமாகிவிடும் என மருத்துவர்கள் நாள் குறித்துவிட்டனர், இப்போது விட்டால் முகிழன் தன் உடன் பிறப்பை பிறகு எப்போது பார்க்க முடியும்?
சரி வருவது வரட்டும் எப்படியாவது முகிழனை அவன் சகோதரியுடன் சந்திக்க வைக்க ஏற்பாடானது
மறுநாள் யாரும் அறியா வண்ணம் முகிழனை அந்த சிகிச்சை அறைக்குள் அழைத்துச்சென்றாள் அவன் தாய், அந்நேரம் பார்த்து அங்கு வந்த தலைமைத் தாதி தன் இரட்டை நாடி சரீரம் கனகனக்க அவர்களிடம் ஓடிவந்து, விழிகளை உருட்டி ஏசத்துவங்கினாள், இந்த அறைக்குள் குழந்தைகளை அழைத்து வரக்கூடாது தெரியுமா? டாக்டருக்குத் தெரிந்தால் திட்டுவார் அழைத்துப்போ வெளியே, என கர்ஜித்தாள்.
வேறு வழியில்லை, மகிழன் தாய் அந்த தாதியை முறைத்துப்பார்த்து" இவன் தன் தங்கையை சந்திக்க வேண்டும், அவளுக்கான பாடலை இவன் பாடாமல் இங்கிருந்து நாங்கள் போகமாட்டோம்" என்றாள். அவள் பதிலுக்குக் காத்திராமல் அவனை அந்தக்குழந்தை அருகே அழைத்துச்சென்றாள், கண்ணாடிக்கூண்டை விலக்கி அக்குழந்தையை தொடச்செய்தாள்!
முகிழன் சிறியதாய் கண் திறவாது படுக்கையில் கிடத்தப்பட்டிருந்த தன் தங்கையை உற்று நோக்கினான், மெல்ல தன் சின்னக்கையால் அவளது வாடிப்போன குட்டிக்கையை தொட்டுப்பார்த்தான், பின்னர் மெல்ல தன் சின்னக்குரலில் அவளுக்கான தனது பாடலை, தான் எப்போதும் தாய்முன் தன் உடன்பிற‌ப்புக்காக பாடிய அந்தப்பாடலை பாடத்துவங்கினான், என் கண்ணே, மணியே, உனக்கான என் பாடல் எனத்துவங்கும் அந்தப்பாடல் அந்த அறையின் அமைதியைக் மெல்ல கிழித்துக்கொன்டு காற்றில் வியாபித்தது!

அவன் மெய்மறந்து பாடிக்கொன்டேயிருந்தான், கண்கள் மூடி தன் உள்ளத்து அன்பையெல்லாம் கொட்டி, என்ன ஆச்சர்யம்! பாடல் வரிகள் இழையோட அதுவரை படுக்கையில் அசைவற்றுக் கிடந்த அக்குழந்தையிடம் மெல்ல இலேசான அசைவு எழுந்தது, அதைக்கண்ட அவன் தாயும் தாதியும் அதிர்ச்சியில்..அவன் தாய் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த இயலாமல் அழுது கொன்டே அவனருகில் நின்று அந்த அதிசயத்தை காண்கிறாள். பாடல் வரிகளோடு, அந்த சிசுவின் மிக மிக மெல்லிய அசைவுகளோடு பாடல் தொடர்கிறது..., தாதி தனை மற்ந்து கண்களில் வழிந்த நீரோடு, அந்த குழந்தை அருகில் சென்று பரிசோதிக்கிறாள்..., இறக்கப்போகும் குழந்தை என முடிவெடுக்கப்பட்ட அந்த சிசு சன்னமான மூச்சு இழையோட உயிர்க்காற்றை மருத்துவ உதவியின்றி சுவாசித்தபடி உயிரோடு உயிராக...உயிர் மீளப்பெற்றிருந்தது..... தன் சகோதரனின் பாடலைக்கேட்டு...




‍‍‍‍

2 comments:

Vasudevan Letchumanan வாசுதேவன் இலட்சுமணன் said...

நெகிழ வைக்கும் சம்பவம்தான். 'அன்பு' அத்தனைக்கும் கட்டுப்படும். மரணத்தைக்கூட மண்டியிடச் செய்யும் வல்லமை பெற்றது அந்த தூய தெய்வீக அன்பு.'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று'...என்ற பாடல் ஞாபகத்திற்கு வருகிறது.

sivanes said...

உண்மைதான் தாங்கள் கூறுவதைப்போல அன்பு மிக மிக சக்தி வாய்ந்தது, மேற்கூறப்பட்ட இந்த சம்பவம் சில காலங்களுக்கு முன் மேற்கத்திய நாடு ஒன்றில் நிகழ்ந்து "a brothers miracle" எனும் பெயரில் மிகவும் பரபரப்பை எற்படுத்தியதாம்.