.

.
.

Saturday, June 13, 2009

தமிழினமும் தற்கொலையும்


இந்த நவநாகரீக உலகில் மனிதன் எவ்வளவோ முன்னேறியுள்ளான், அவன் வாழ்வை மேம்படுத்த எத்தனை எத்தனை கண்டுபிடிப்புகள், ஆனால் அவை அத்தனையும் புற வாழ்வை மேம்படுத்திய அளவு அக வாழ்வை மேம்படுத்தவில்லை என்பதனை அருகி வரும் மனித நேயங்களும் பெருகி வரும் மனித சீரழிவுகளும் உறுதிபடுத்துகின்றன.


தனிமனித சீரழிவு என்று வரும்பொழுது அதில் முக்கிய பங்கு வகிப்பது தற்கொலையே. அன்மைய ஆய்வின்படி 39 மணித்துளிக்கு ஒருவர் வீதம் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகின்றது. மேலும் 10 முதல் 20 மில்லியன் பேர் தற்கொலை முயற்சியிலிருந்து ஆண்டுதோறும் தப்புவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

ஏன் இந்த நிலை? குறிப்பாக நம்மவர்கள் ஏன் இவ்விடயத்தில் முன்னனியில் இருக்கின்றார்கள்? சஞ்சிக்கூலிகளாக அத்துவானக்காடுகளில் அநாதைகளாக அடைக்கப்பட்டு வறுத்தெடுக்கப்பட்ட போதிலும் நம் முன்னோர்கள் சோர்ந்து போய் தற்கொலையை நாடவில்லையே, வாழ்ந்து வழித்தோண்றல்களாக‌ விட்டுச்சென்றுள்ளனரே நம்மை , இப்பொழுது மட்டும் புதிதாக எங்கிருந்து வந்தது இந்த கோழைத்தனம்? வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாது தவறான முடிவை நாடும் அறிவிலித்தனம்.
மறுத்தாலும் மறைக்க முடியாத ஒரு உண்மை, நம்மில் பெரும்பாலோர்க்கு எளிதில் உணர்ச்சிவயப்படும் குணம் அமைந்துள்ளது. பள்ளிப்பரீட்சையில், காதலில், மேலும் வாழ்வில் முக்கியமானதாகக் கருதும் விடயங்களில் ஏற்படும் தோல்வி, எளிதில் ஒருவரை தற்கொலைப்பாதைக்கு இட்டுச்செல்கிறது.
பள்ளியில் படிக்கும் மாணாக்கர்களுக்கு பெற்றோர் சிறந்த வழிகாட்டியாகவும், முன்னுதாரணமாகவும் திகழவேண்டும். பிள்ளைகளை ஆடு மாடுகளைப்போல் மிரட்டி வளர்ப்பதும், தன்னிச்சைப்படி அவர்களை ஆட்டிப்படைப்பதும், அளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகளை அவர்கள் பால் செலுத்துவதும், பிள்ளைகளை எளிதில் மனமுடையச்செய்கிறது. அன்பில்லாத பெற்றோர் பிள்ளைகளுக்கு வாய்த்த சாபம், எனவே தோழமையோடு கண்கானித்து வளர்க்கப்படும் பிள்ளைகள் நிச்சயம் இதுபோன்ற முடிவுகளை தேட மாட்டார்கள். சாய்ந்து அழ தோளிருந்தால் மலையே சாய்ந்தாலும் மனித மனம் வீழாது, இதை அனைவரும் உணர வேண்டும்.

அடுத்தது காதல்தோல்வி , இது நமது சமுதாயத்தின் மற்றொரு புண். காதலிப்பவர்கள் தங்களை மட்டுமே கவனத்தில் கொண்டு, தங்களின் இயல்பு வாழ்க்கையை மறக்கின்றனர், இறுதியில் ஏமாற்றமே மிஞ்சும் எனும் நிலை வரும் பொழுது தற்கொலையை எளிதில் நாடி விடுகின்றனர். உயிரைக்கொடுத்து காதலை வாழவைக்கிறார்களாம்??? காதல் என்ன இவர்கள் குடும்ப சொத்தா வாழவைக்க? எல்லாம் சினிமா படுத்தும் பாடு! காதல் புனிதமானது ஆனால் காதலிப்பவர்கள் எல்லோரும் தேவதைகளல்ல! சராசரி மனிதர்கள், இதை முதலில் இவர்கள் உணர வேண்டும். வாழ்க்கையை வெல்ல வேண்டும் காதல் தோல்வியை வாழ்க்கைத்தோல்வி என நினைத்து தற்கொலையை நாடி வீணடித்துவிடக்கூடாது! அது விவேகமல்ல! பிறந்த மண்ணுக்கும் பெற்ற தாய்க்கும் எந்த நல்லதை செய்யாவிட்டாலும், அந்த தாயை நோகடித்து சாவை நாடி பூமிக்கு பாரமாய் அமைந்து விடக்கூடாது.

இறுதியாக ஏழ்மை, சில காலங்களுக்கு முன், ஒரு அழகிய இளம் தாய் தன் குழந்தைகளோடு இரயில் தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொன்டார்.
விசாரித்தால் ஏழ்மையாம்! ஏனிந்த நிலை, நமது சமுதாயம் இவர்களுக்கு அரணாக விளங்கியிருந்தால், ஒரு வேளை அந்தத்தாயும் அவர் குழந்தைகளும் காப்பாற்றப்பட்டிருக்கலாம் அல்லவா? நம் நாட்டில் ஒரு முஸ்லீம் நண்பருக்கு பிரச்சனை என்றால் அவர் தொழும் மசூதியில் அவருக்கான உதவியை அவரால் பெற முடியும், ஒரு கிருஸ்த்துவ நண்பருக்கு உதவி தேவை என்றால் அவர் தேவாலயத்தில் நிச்சயம் அவருக்கு உதவி கிடைக்கும், ஆனால் நம் நிலை? நம்மிடம் வசூல் செய்யப்பட்டு இயங்கும் ஆல‌யங்களில் இதுபோன்ற உதவிகள் உள்ளனவா? இருந்தால், தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே!

இறுதியாக‌ த‌ற்கொலையை தவறு என்று நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. இதோ வாழ்க்கையை வாழ்ந்து முடித்த வாழ்க்கைக்கவிஞர்
கண்ணதாசன் சோகத்தில் என்ன கூறுகிறார் என்று கேளுங்கள்,

"ஆண்டவா எனக்கு என்ன துன்பம் வரட்டும், எவ்வள‌வு துயரங்கள் வரட்டும், உனக்காக தாங்கிக்கொள்வேன். இந்த பூமியிலே பிறந்தாகி விட்டது, வாழ்ந்தாக வேண்டும், தற்கொலை செய்துகொள்ள நான் தயாராக இல்லை. மரணம் என்ற ஒன்றை அனுப்பி என்னை நீ எடுத்துக்கொள்கிற வரையில், இங்கு வாழ்வது என்று முடிவு கட்டிவிட்டேன், இந்த வாழ்க்கைச்சாலையில் எது வந்தாலும், எது குறுக்கிட்டாலும் கூட நான் கவலையில்லாமல் உன் சந்நிதியிலேயே நிற்பேன், வாழுவேன், எனக்காக யார் வாழ்கிறார்களோ அவர்களைக்காப்பாற்றுவேன், யாருக்காக நான் வாழ வேண்டுமோ அவர்களுக்காக நான் வாழுவேன்!"

No comments: