
மலர்கள் அசைகின்றன, ஆனால்
மலைகள் அசைவதில்லை!
பேசாமல் இருப்பது பெரும் திறமை, பேசும் திறமையைவிட அது மிகப்பெரியது! நிறையபேசுகிறவன் தன் வார்த்தைகளாலேயே காட்டிக்கொடுக்கப்படுகிறான். சளசளவென்று பேசுகிறவன், எவ்வளவு பெரிய கெட்டிக்காரனாக இருந்தாலும், சொற்பொழிவாளனாக இருந்தாலும் தன் பலவீனத்தைக்காட்டிக்கொள்கிறான், மெளனி முட்டாளாக இருந்தாலும் பலசாலியாகக்காணப்படுகிறான்.
ஒன்றைச்சொல்ல வேண்டும் என்று விரும்பி அதைச்சுருக்கமாக தெளிவுபடுத்துகிறவன் பெரிய மரியாதையைப்பெற்றுவிடுகிறான்.சிறிய விடயத்தைக்கூட வளைத்து வளைத்து பேசுகிறவன் கேலிக்கு ஆளாகிறான். ஞானிகள் சில விடயங்களைக்கூறுகிறார்கள் அவை பொன்மொழிகளாகி விடுகின்றன. பைத்தியக்காரர்கள் பதினாயிரம் பேசுகிறார்கள் அவை சீந்துவாரில்லாமல் போகின்றன.

ஏராளமான வரிகளைக்கொன்ட இலக்கியங்களைவிட ஏழு வார்த்தைகளில் அடங்கிவிட்ட திருக்குறள் உலகைக் கவர்ந்து விட்டது. காலந்தோறும் துணைக்கு வருகிறது, நிலையான தத்துவதைச்சொல்கிறது.
மனிதர்களை விட பல மிருகங்களுக்கு அதிக வயது, அவற்றைவிட மரங்களுக்கு அதிக வயது, அவற்றைவிட மலைகளுக்கு அதிக வயது, காரணம் அவை பேசாமலும் அதிர்ச்சி அடையாமலும் இருப்பதே!
பி.கு : பல நேரங்களில் பேசாமலிருப்பது நன்மை என்றாலும் சில சமயங்களில் பேசவேண்டிய விடயங்களை பேசவேண்டிய நேரத்தில் பேசவேண்டிய இடத்தில் பேசியே ஆக வேண்டும்.!
No comments:
Post a Comment