.

.
.

Wednesday, June 17, 2009

கைகொடுக்கும் காப்புறுதிகள்


இப்பொழுதெல்லாம் நாம் தினசரி நாழிதழ்கள் வாசிக்கையில் அடிக்கடி நம் கண்களில் படும் செய்தி, "நோயுற்ற இன்னாருக்கு நன்கொடை தேவை" அல்லது "இவருடைய அறுவை சிகிச்சைக்கு உதவி தேவை "என்பதாக இருக்கும், கூடவே, வாட்டத்தோடு காட்சியளிக்கும் ஒரு நபர் அல்லது குடும்பம் அல்லது பார்க்கும்போதெ மனதை வருத்தும் ஒரு நோயுற்ற குழந்தையின் படம் இணைக்கப்பட்டிருக்கும். அவர்கள் பிரச்சனை கைமீறிப்போனதால் பொதுமக்கள் உதவியை எதிர்பார்த்திருப்பார்கள். இதில் தவறேதும் இல்லை.‌ நம் சமுதாயத்திற்கு நாம்தான் உதவ வேண்டும் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால். ஏன் நம்மவர்கள் இன்னும் இப்படி இன்னலிகளிலேயே உழல்கிறார்கள் என யோசித்தோமானால் நாம் உண‌ரக்கூடிய ஒரு செய்தி, "ந‌மது இனத்தின் அலட்சியம்" அல்லது முன்னெச்சரிக்கை இன்மை, ஆபத்துக்காலங்களுக்கு கைகொடுக்கும் முன்னேற்பாடுகளை கைவசம் கொண்டிருக்காத தன்மை எனக்கூறலாம்!
நம்மவர்களில் பெரும்பாலோர் சராசரி நடுத்தரவர்க்கத்தை சார்ந்தவர்களாகவே உள்ள‌னர். இவர்கள் தங்களது ஆபத்து அவசர காலங்களுக்கு உதவியாக காப்புறுதிகளை கைவசம் வைத்திருந்தால் அது அவர்கள் வாழ்வுக்கு எவ்வளவோ பாதுகாப்பாய் அமையும் என்று தோன்றுகிறது.
விபத்தும், ஆபத்தும் வாழ்வில் சொல்லிக்கொன்டு வருவதில்லை, "வரும் ஆனா வராது" என்று சினிமாவில் ஒரு தாத்தா நகைச்சுவை செய்வாரே, அதைப்போல "வராது ஆனால் சில சமயங்களில் வந்துவிடும்". வந்துவிட்டால் என்ன செய்வது? அதற்குத்தான் முன்னேற்பாடுகள் அவசியம் என்பது.

எனக்குத்தெரிந்த‌ ஒரு சம்பவத்தில் ஒரு பெரியவர் காலில் அடிபட்டு மருத்துவமனை சென்றார், ஒரு வாரம் மருத்துவமனையில் வைத்திருந்து, அவர் காலை காப்பாற்ற முடியாது எனக்கூறி காலைத்துண்டித்துவிட மருத்துவர்கள் முயன்றனர், அதில் ஒருவர் தமிழ் பெண் மருத்துவர்!?, படித்தவர்கள் யாரும் பக்கத்தில் இல்லாத சமயத்தில் அவரின் மனைவியை வற்புறுத்தி கையொப்ப வாங்க முயற்சித்தனர், ஆனால் அவர் மனைவி கொஞ்சம் விடயம் தெரிந்தவர் என்பதால் படித்த தனது பிள்ளைகளை வரவழைத்து அவர் கண‌வரை அங்கிருந்து வெளியேற்றி தனியார் மருத்துவமனையில் சேர்த்து அவரையும் அவர் காலையும் காப்பாற்றினார், செலவு 20,000 தைத்தாண்டியது. இந்த சம்பவம் வெளிநாட்டில் நடக்கவில்லை, நாம் வாழ்கிறோமே இதே நாட்டில்தான் நடந்தது. அவர் மட்டும் தனக்கென ஒரு காப்புறுதியை தன் கைவசம் வைத்திருந்தால் சிரமமின்றி ஒரு செலவுமின்றி அவர் உடனடியாக‌ தனியார் மருத்துவமனையில் சிறந்த வைத்தியம் பெற்று தேறியிருப்பார் அல்லவா?
இதுபோன்ற ஏகப்பட்ட சம்பவங்கள், ஆப‌த்தில் அவசர சிகிச்சை இன்றி உயிர்போன சம்பவங்கள், அலைகழிக்கப்பட்ட சிகிச்சைகள், அதனால் ஏற்பட்ட இழ‌ப்புகள் என நம்மில் பலருக்கு பாதிப்புக்கள் ஏற்படுகின்றன, இலவச மருத்துவம், பிறரிடம் நன்கொடை வாங்கி மருத்துவம் என இல்லாமல் முடிந்தவரை தங்கள் வசதிக்கேற்ப, தம‌க்கும், தம்மைச்சார்ந்தவர்களுக்கும் தகுதியான காப்புறுதிகளை வாங்கி வைத்துக்கொள்வதே அறிவான செயலாகும்.
இறுதியாக‌, காப்புறுதி முக‌வ‌ர்க‌ளுக்கு ஒரு விண்ண‌ப்ப‌ம், நீங்க‌ளும் ச‌முதாய‌த்திற்கு சேவை செய்ப‌வ‌ர்க‌ளே, ஆகையால், ஆதாயம் ஒன்றையே குறிக்கோளாக கொள்ளாமல், ம‌க்க‌ளுக்கு காப்புறுதி சம்பந்தமான‌‌ விள‌க்க‌ங்க‌ளும், அவர் தகுதிக்கேற்ற காப்புறுதி பரிந்துரைகளையும் நீங்கள் செய்திடல் வேண்டும், உங்கள் வருமானத்திற்காக சாதாரண மக்களை அவர்கள் வசதிக்கு மீறிய காப்புறுதிகளை வாங்கவைத்து பிறகு அவர்களால் அதை கட்டமுடியாமல் திண்டாட செய்துவிடாதீர்கள். நமது முன்னேற்பாடுகள் பல இடர்களில் இருந்து நம்மையும் நாம் நேசிப்பவர்களையும் காக்கட்டும்.

பி.கு : வாய்ப்பும் வசதிகளும் ஓரளவு வாய்க்கப்பெற்றவர்களுக்காகவே இந்த விடயம் இங்கே பதிவிடப்பட்டுள்ளது, மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்க்கும், பெரிய அளவில் மருத்துவ செலவை எதிர் நோக்கியவர்களுக்கும் இந்த பதிவு அமைக்கப்படவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

No comments: